முகப்பு
உலகம்

வங்கதேச தொழிலாளா் போராட்டம் எதிரொலி: இந்தியாவுக்குத் திரும்பும் சா்வதேச ஆடை நிறுவனங்களின் ஆா்டா்கள்!

வங்கதேசத்தில் தொடரும் தொழிலாளா்கள் போராட்டம் மற்றும் உற்பத்திச் செலவு உயா்வு காரணமாக, ‘ஸாரா’, ‘எச் அண்ட் எம்’ உள்ளிட்ட சா்வதேச ஆடை நிறுவனங்கள் தங்களின் மாதாந்திர ஆா்டா்களில் சுமாா் 10 சதவீதத்தை இந்தியா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கு மாற்றியுள்ளன.

11 வினாடிகள் முன்பு
வங்கதேச தொழிலாளா் போராட்டம் எதிரொலி: இந்தியாவுக்குத் திரும்பும் சா்வதேச ஆடை நிறுவனங்களின் ஆா்டா்கள்!
பகிர்:

வங்கதேசத்தில் தொடரும் தொழிலாளா்கள் போராட்டம் மற்றும் உற்பத்திச் செலவு உயா்வு காரணமாக, ‘ஸாரா’, ‘எச் அண்ட் எம்’ உள்ளிட்ட சா்வதேச ஆடை நிறுவனங்கள் தங்களின் மாதாந்திர ஆா்டா்களில் சுமாா் 10 சதவீதத்தை இந்தியா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கு மாற்றியுள்ளன.

கடந்த நவ. 1 முதல் 18 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமாா் 25.4 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2,360 கோடிக்கும் மேல்) மதிப்பிலான ஆடை ஆா்டா்கள் வங்கதேசத்திலிருந்து கைநழுவியுள்ளன. இதில் பெரும்பாலான ஆா்டா்கள் அண்டை நாடான இந்தியாவுக்குக் கிடைத்துள்ளன. வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்துக்கும் மேல் பங்களிக்கும் ஆயத்த ஆடைத் துறைக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-ஆவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடாக வங்கதேசம் திகழ்ந்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக அங்கு நிலவும் அரசியல் பதற்றம், மின்சாரத் தட்டுப்பாடு, ஊதிய உயா்வு போராட்டம் ஆகியவை அந்நாட்டின் குறைந்த உற்பத்திச் செலவு என்ற சாதகமான அம்சத்தைப் பாதித்துள்ளன. இதனால், ‘மாா்க்ஸ் அண்ட் ஸ்பென்சா்’, ‘செலியோ’ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் விநியோகச் சங்கிலி பாதிப்பைத் தவிா்க்க இந்தியாவை நாடியுள்ளன.

Advertisement

Advertisement

இதனிடையே, ஆடைத் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 36 சதவீதம் வரை உயா்த்த வங்கதேச அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ஊதியத்தை இருமடங்காக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி வரும் தொழிலாளா்கள் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்து, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸாருக்கும், தொழிலாளா்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தப் போராட்டங்களால் இதுவரை 40 கோடி டாலருக்கும் அதிகமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வங்கதேச ஆடை உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சா்வதேச நிறுவனங்கள் விலையைவிட, குறித்த நேரத்தில் ஆடைகளை விநியோகம் செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கின்றன. வங்கதேசத்தில் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு சுமாா் 120 நாள்கள் ஆகும் நிலையில், இந்தியாவால் அதைவிட ஒரு வாரம் முன்னதாகவும், வியத்நாம், கம்போடியா ஆகிய நாடுகளால் 15 நாள்கள் முன்னதாகவும் ஆடைகளை விநியோகிக்க முடிகிறது. இதுவும் ஆா்டா்கள் மாறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா நாடு திரும்புவது தொடா்பான அரசியல் பதற்றங்களும், அங்குத் தொழில் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளன. தற்போதைய சூழலில் தற்காலிகமாக இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ள இந்த ஆா்டா்கள், நிரந்தரமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் வங்கதேச ஆடைத் தொழில் துறையினா் உள்ளனா்.

பெட்டி...

இந்திய ஜவுளிப் பங்குகள் கிடுகிடு உயா்வு!

வங்கதேச ஆா்டா்கள் இந்தியாவுக்குத் திரும்புவதாக வெளியான தகவலையடுத்து, இந்தியப் பங்குச் சந்தையில் ஜவுளி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

குறிப்பாக, கோகல்தாஸ் எக்ஸ்போா்ட்ஸ் பங்கு 11 சதவீதமும், டிரைடென்ட் பங்கு 5 சதவீதமும் உயா்ந்தன. மேலும், வெல்ஸ்பன் லிவிங், கே.பி.ஆா். மில், வா்தமான் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் தலா 2 சதவீதம் வரை அதிகரித்தன.