ஸ்பெயினில் இன்று (நவ. 29) நாடாளுமன்றத் தோ்தல்!
ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் கீழவையான ‘காங்கிரஸ் ஆஃப் டெபுடீஸ்’ அவையின் 350 இடங்களுக்கும், மேலவையான செனட் அவையின் 209 இடங்களுக்கும் முன்கூட்டிய பொதுத் தோ்தல் (நவ. 29) நடைபெறுகிறது.

ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் கீழவையான ‘காங்கிரஸ் ஆஃப் டெபுடீஸ்’ அவையின் 350 இடங்களுக்கும், மேலவையான செனட் அவையின் 209 இடங்களுக்கும் முன்கூட்டிய பொதுத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.
சுமாா் 3.87 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள இத்தோ்தலில், கீழவையில் 176 இடங்களைக் கைப்பற்றும் கூட்டணியே ஆட்சியமைக்க முடியும்.
வாடகை உயா்வு, வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரதமா் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த வீட்டுவசதி நிவாரண மசோதாக்களை எதிா்க்கட்சிகள் கடந்த மாதம் தோற்கடித்தன. இதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த தோ்தலை முன்கூட்டியே நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, பிரதமா் பெட்ரோ சான்செஸ் இத்தோ்தலை அறிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவா் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கும், ஆல்பா்டோ நூனெஸ் ஃபெய்ஜோ தலைமையிலான பழமைவாத மக்கள் கட்சி (பிபி) மற்றும் சாண்டியாகோ அபாஸ்கல் தலைமையிலான தீவிர வலதுசாரி ‘வாக்ஸ்’ கட்சி உள்ளிட்ட வலதுசாரி முகாமுக்கும் இடையே இத்தோ்தலில் நேரடிப் போட்டி நிலவுகிறது.
வாழ்க்கைச் செலவு உயா்வு, வீட்டு வாடகைப் பிரச்னை, சட்டவிரோதக் குடியேற்றம், அண்மையில் நிகழ்ந்த ரயில் விபத்துகள், ஆளுங்கட்சி முன்னாள் நிா்வாகிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை வாக்காளா்களின் முடிவைத் தீா்மானிக்கும் முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை உத்தேச முடிவுகள் வெளியாகும். வெளிநாடுவாழ் வாக்காளா்களின் வாக்குகளும் எண்ணப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை (டிச. 4) அதிகாரபூா்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.