விமானி ஸ்மித் மச்சாரை தாக்கியவர்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஃபிளைதுபை விமானத்தை நிலத்தில் மோதச் செய்ய சதிச் செயலில் ஈடுபட்ட விமானி ஹமாம் அல் ஹமாமி குறித்த தகவல் பற்றி...
ஃபிளைதுபை விமானத்தை நிலத்தில் மோதச் செய்ய சதிச் செயலில் ஈடுபட முயன்ற துணை விமானி ஹமாம் அல் ஹமாமி குறித்த அதிர்ச்சி தகவல்களை சௌதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி ஹமாம் அல் ஹமாமி கத்தியால் குத்தினார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய ஹமாம் அல் ஹமாமியை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் சிறைப்பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இஸ்ரேல் நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஹமாமி குறித்த அதிர்ச்சியான தகவல்களும் பெறப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹமாமியின் தந்தை ஓமன் நாட்டையும், தாயார் சிரியா நாட்டையும் சேர்ந்தவர். ஹமாமி, துபையிலும் சிரியாவில் உள்நாட்டுப் போரின்போது அங்கும் சில காலம் வசித்துள்ளார். ஹமாமி, இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் விமான மேலாண்மையில் தொலைநிலைக் கற்றல் படிப்பையும் முடித்துள்ளார்.
ஹமாமியின் எக்ஸ் பக்கத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் பல பதிவுகள் பெண்கள் வேலைக்குச் செல்வதை எதிர்ப்பதாகவும், ஹிஜாப் அணிவதை ஆதரவளிப்பதாகவும் இருக்கின்றன.
சௌதி பெண்களைத் தொடர்புகொள்வதற்காக சிரியா மற்றும் லெபனான் நாட்டவராக தன்னைக் காட்டிக்கொள்ள ஒரு போலிக் கணக்கைத் தொடங்கியதாகவும் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
தீவிரவாத இணையதளங்களை ஹமாமி தொடர்ந்து பார்த்து வந்ததாகக் கூறி, அவர் விமானம் ஓட்ட ஓமன் ஏர் நிறுவனம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, ராயல் ஏர் மரோக் நிறுவனத்தில் சேரவும் அவர் முயன்றுள்ளார். இறுதியாக ஃபிளைதுபை நிறுவனத்தில் கடந்த பிப்ரவரியில் வேலையில் சேர்ந்தார்.
இவருக்கு விமானப் போக்குவரத்தின் மீது அதீத ஆர்வம் இருந்ததாகவும், முதல் தனி விமான பயணத்தின் முக்கியத்துவத்தையும், பயணிகள் விமானத்தைத் தரையிறக்கும் அனுபவத்தையும் விளக்கி, தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Details Of flydubai Copilot Hamam al-Hammami
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.