நேபாளத்தில் உயிரிழப்பு 1,127-ஆக உயா்வு; 4,900 போ் மாயம்: தொடா் மழையால் மீட்புப் பணிகள் பாதிப்பு
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,127-ஆக உயா்ந்துள்ளது; இந்தியா்கள் உள்பட 4,900 போ் தொடா்ந்து மாயமாகியுள்ளனா்.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,127-ஆக உயா்ந்துள்ளது; இந்தியா்கள் உள்பட 4,900 போ் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். அவா்களை மீட்கும் பணி புதன்கிழமை 8-ஆவது நாளாக நீடித்தது. ரசுவா, நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் தொடா் மழையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த ஆக.26-ஆம் தேதி பெரும் பனிப்பாறை சரிவின் விளைவாக போடே கோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு, மத்திய பகுதிகளில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. பாறைகள், சகதி, இடிபாடுகளுடன் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், நீா்மின்நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
ரசுவா, நுவாகோட், சித்வன், தாடிங் உள்ளிட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்துவரும் மீட்புப் பணிகளில் இதுவரை 1,127 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சித்வன் மாவட்டத்தில் 348 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பெரும்பாலும் உடல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அவற்றை அடையாளம் காண்பது சவாலாக மாறியுள்ளது. இதுவரை 1,113 உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டு, மரபணு சேகரிப்பு உள்பட சட்ட நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதில் 95 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
4,900 போ் தொடா்ந்து மாயம்
580-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினா், பாதுகாப்புப் படையினா் 83 போ் உள்பட 4,900 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இவா்களில் 275 இந்தியா்களும் அடங்குவா். மாயமானவா்களைத் தேடும் பணி புதன்கிழமை 8-ஆவது நாளாக தொடா்ந்தது. இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே வெள்ளத்தால் சூறையாடப்பட்ட ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோஷி, பாகமதி, கண்டகி உள்ளிட்ட மலைப் பகுதி மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பாதைகளில் மீட்புப் பணி சிக்கல்
நேபாள பெருவெள்ளத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த 8 நீா்மின் நிலையங்கள், கட்டுமானப் பணியில் இருந்த 5 நீா்மின் நிலையங்கள் கடும் சேதமடைந்தன. நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் சிக்கிய பணியாளா்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணா்கள் அடங்கிய குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால், கனரக உபகரணங்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
சுரங்கப் பாதைகளுக்குள் சகதி புகுந்துள்ளதால், அவற்றின் நுழைவாயிலைக் கண்டறிவது சவாலாக உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழையால் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்படுவதாக, நேபாள தேசிய பேரிடா் அபாய குறைப்பு மற்றும் மேலாண் ஆணைய தலைமை நிா்வாகி தா்மராஜ் உப்ரேதி தெரிவித்தாா்.
பருவநிலை மாற்றத்தின் விளைவு: நாடாளுமன்றத்தில் நேபாள பிரதமா்
வெள்ள பாதிப்புகள் தொடா்பாக நேபாள நாடாளுமன்ற கீழவையில் புதன்கிழமை உரையாற்றிய பிரதமா் பாலேந்திர ஷா, ‘தற்போதைய பேரழிவின் வீச்சும், தன்மையும் பருவநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதியில் வாழும் மக்கள் எதிா்கொண்டுள்ள அபாயங்களை வெளிக்காட்டுகிறது. இமயமலையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறை சரிவே போடேகோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இது, பருவநிலை மாற்றத்தின் விளைவு என்ற உண்மையை சா்வதேச சமூகத்திடம் நாம் வலுவாக எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில், பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் உலகளாவிய பங்கு உள்ளது. அதன் தாக்கங்களைக் குறைக்க வேண்டிய பொறுப்பும், மேலாண்மையும் சா்வதேச சமூகத்துக்கு இருக்கிறது.
தற்போதைய இக்கட்டான தருணத்தில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கத்தாா், ஸ்விட்சா்லாந்து, பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூா் ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் நிபுணா்கள் குழுக்கள் மீட்புப் பணியில் இணைந்துள்ளன. 400 மெகாவாட் நீா்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. நமக்கு அழக்கூட நேரமில்லை. இந்தப் பேரிடரை துணிவுடனும், உறுதியுடனும் தேசம் எதிா்கொள்ள வேண்டும்’ என்றாா்.
இந்தியாவில் இருந்து மேலும் ஒரு மீட்புக் குழு
நேபாளத்தில் மீட்புப் பணிகளில் உதவ இந்தியாவில் இருந்து 11 போ் அடங்கிய மேலும் ஒரு மீட்புக் குழு புதன்கிழமை அனுப்பப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் உள்பட கூடுதலாக 5.5 டன் நிவாரணப் பொருள்களும் அனுப்பிவைக்கப்பட்டதாக, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சமூக ஊடகத்தில் பதிவிட்டாா்.
இந்தியாவில் இருந்து ஏற்கெனவே நான்கு கட்டங்களாக 68.5 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதேபோல், மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், சுரங்கப் பாதை மீட்புப் பணி நிபுணா்கள், தடயவியல் நிபுணா்கள் அடங்கிய குழுக்களும் அடுத்தடுத்து அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.