நேபாளத்திற்கு 5.5 டன் மருந்துகளுடன் 5-வது நிவாரண விமானம் புறப்பட்டது!
நேபாளத்திற்குக் கூடுதல் நிவாரணப் பொருள்களை அனுப்பியது பற்றி..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு, 11 பேர் கொண்ட மீட்புக் குழுவுடன் ஐந்தாவது தொகுதி நிவாரணப் பொருள்களாக 5.5 டன்னுக்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளை இந்தியா புதன்கிழமை அனுப்பியது.
நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி 8 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் மேலும் பல உடல்களை மீட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த இக்கட்டான சூழலில் நேபாளத்துக்கு உதவுவதற்காக பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டின் பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்புதல், நிவாரணப் பொருள்களை வழங்குதல் போன்ற உதவிகளைச் செய்து வருகிறது.
அந்த வகையில், வெள்ளம் ஏற்பட்ட நாள் முதல் இந்தியா இதுவரை நான்கு தொகுப்புகளாக நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், அவசரக்கால மீட்புக் குழுக்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை இதுவரை மீட்டிருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சுமார் 4 ஆயிரம் பேர் வரை இன்னும் மாயமாகியுள்ளனர்.
அதன்படி, இந்தியாவின் ஐந்தாவது விமானம் நேபாளத்திற்கு இன்று புறப்பட்டுள்ளது. இதில் சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்புக் குழுவும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துகளும் கொண்டு செல்லப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இந்தியா ஏற்கெனவே நேபாளத்திற்கு மொத்தம் 68.5 டன் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களுடன், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய குழுவையும், தொழில்நுட்பக் குழுவையும் புது தில்லி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.