நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,127-ஆக உயர்வு; எட்டாவது நாளாக மீட்புப் பணிகளின் தீவிரம்!
நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 1,127-ஆக உயர்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து...
நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் எட்டாவது நாளாக, உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியவும் உடல்களை மீட்கவும் மீட்புக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1,127-ஆக உயர்ந்துள்ளது; அதேவேளையில் 4,858 பேர் மாயமாகியுள்ளனர் என்று நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ள ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உயிரிழந்தோா் உடல்களை தேடும் பணிகள் எட்டாவது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு வாரமாக நேபாள தேசிய பேரிடா் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளால் 12,000-க்கும் மேற்பட்டோர் போ் மீட்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் , நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127-ஆக உயர்ந்துள்ளது; பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 6,541 பேர் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் காணாமல் போன 4,858 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக என்று நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பேரிடரில் நேபாளத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 583 வெளிநாட்டினரும், சீனாவில் 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டினரும் காணாமல் போயுள்ளனர்.
நேபாளக் காவல்துறையின் தகவலின்படி, சித்வனில் 348 உடல்களும், நவல்பராசி கிழக்கில் 217 உடல்களும், நவல்பராசி மேற்கில் 190 உடல்களும், நுவாகோட்டில் 155 உடல்களும் மீட்கப்பட்டன. மேலும் கோர்காவில் 66 உடல்களும், தடிங்கில் 59 உடல்களும், ரசுவாவில் 45 உடல்களும், தனாஹுவில் 38 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
1,113 உடல்களுக்கான உடல்கூராய்வு மற்றும் சட்டரீதியான அடையாள நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், 95 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போன தங்கள் உறவினர்களைக் கண்டறிய குடும்பங்களுக்கு உதவும் வகையில், அடையாளம் காணப்படாத 911 உடல்கள் குறித்த விவரங்கள் நேபாளக் காவல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், நிவாரணப் பொருள்கள் விநியோகம் மற்றும் மீட்கப்பட்ட உடல்களைக் கையாளுதல் ஆகிய பணிகளுக்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 7,912 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல், இடிபாடுகளால் அடைபட்ட சாலைகளைச் சீரமைத்தல் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்களுடன் இணைந்து தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலும் காவல் துறைக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
Nepal flood death toll rises to 1,127, nearly 4,858 missing on eight day of rescue operations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.