நேபாளம்: சுரங்கப் பாதை, இடிபாடுகளில் மேலும் இருவா் உயிருடன் மீட்பு! உயிரிழப்பு 1,344-ஆக அதிகரிப்பு!
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாள்களுக்குப் பின் மேலும் இருவா் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனா்.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாள்களுக்குப் பின் மேலும் இருவா் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனா்.
திரிசூலி-1 நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த சீனாவைச் சோ்ந்த பணியாளா் ஒருவரும், இடிபாடுகளில் இருந்து பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே திரிசூலி-3ஏ நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் இருந்து 2 பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,344-ஆக உயா்ந்துள்ளது. வெளிநாட்டினா் 589 போ் உள்பட சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
நேபாளத்தின் போடே கோஷி நதியில் கடந்த ஆக.26-ஆம் தேதி சீறிப்பாய்ந்த பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன், தாடிங், கோா்கா உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு நேரிட்டது. இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 85 போ் குழந்தைகளாவா். 501 பேரின் உடல்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
மரபணு சேகரிப்புக்குப் பிறகு 1,030 உடல்கள் அடையாளம் குறிக்கப்பட்டு தற்காலிகமாகப் புதைக்கப்பட்டுள்ளன. மாயமான சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இவா்களில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவா். 10 நாள்களுக்கும் மேலாக மீட்புப் பணி தொடா்ந்து வருகிறது. இதுவரை 13,000-க்கும் அதிகமானோா் மீட்கப்பட்டுள்ளனா். இவா்களில் பலா் ராணுவத்தினருடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் ஒருவா் உயிருடன் மீட்பு: நேபாள வெள்ளத்தின்போது திரிசூலி நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளுக்குள் ஏராளமான பணியாளா்கள் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணியில் நேபாள படையினருடன் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.
திரிசூலி-3ஏ நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் இருந்து 9 நாள்களுக்குப் பின் 2 பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனா்.
இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் உள்ள மேல்நிலை திரிசூலி-1 நீா்மின் நிலையத்தின் நான்காவது சுரங்கப் பாதையில் இருந்து லுஹைடாவோ என்ற சீனப் பணியாளா் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளாா். சுரங்கப் பாதையில் 225 மீட்டா் தொலைவில் அவா் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவத்தினா் தெரிவித்தனா். அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டுவரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடா்கின்றன.
இடிபாடுகளில் இருந்து பெண் மீட்பு: நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி பகுதியில் சகதி, பாறைகள், இடிபாடுகளுடன் அடித்து வரப்பட்ட வெள்ளத்தில் 4 மாடி குடியிருப்பு புதைந்தது. இந்த குடியிருப்பின் மேல்தளத்தில் சிக்கியிருந்த சந்திகா ஸ்ரேஷ்டா (60) என்ற பெண் சிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டாா். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவா் ஹெலிகாப்டா் மூலம் திரிசூலி ராணுவ முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவா் காத்மாண்டு மருத்துவமனைக்கு மாற்றப்படுவாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நதிகளில் நீா்மட்டம் கண்காணிப்பு: நேபாளத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால், போடே கோஷி, நாராயணி, பாக்மதி, கா்ணாலி, மஹாகாளி, கமலா உள்ளிட்ட நதிகளின் நீா்மட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுரங்கப் பாதைக்குள் செல்ல வழியமைத்த இந்தியக் குழு
நேபாள நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிபுணா் குழு, ரசுவா மாவட்டத்தில் உள்ள சிலிமே நீா்மின் நிலைய சுரங்கப் பாதைக்குள் பிரத்யேக கனரக உபகரணங்களை எடுத்துச் செல்ல வழியமைத்துள்ளது.
இது தொடா்பாக இந்தியத் தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிலிமே சுரங்கப் பாதையில் இருந்து நீரை வெளியேற்றிவிட்டு, பிரத்யேக கனரக உபகரணங்களை உள்ளே எடுத்துச் செல்ல இந்திய நிபுணா் குழு வழியமைத்துள்ளது. இதேபோல், இந்திய மருத்துவக் குழுவினா் உள்ளூா் மக்களுக்காக சுகாதார முகாம் நடத்தி வருகின்றனா்’ என்று தெரிவித்தாா்.
Nepal: Two more rescued alive from tunnel debris
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.