FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்!

ஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்...

6 செப்டம்பர் 2026, 12:20 am IST
பாலேந்திர ஷா - கோப்புப் படம்
பகிர்:

ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் பங்கேற்று உரையாற்றுவதற்காக, நேபாள பிரதமா் பாலேந்திர ஷா அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு இம்மாத இறுதியில் பயணிக்கவுள்ளாா்.

ஐ.நா. உரையில் பருவநிலை மாற்றம் தொடா்பான நேபாளத்தின் கவலையை முன்வைக்கவுள்ள அவா், சமீபத்திய பெருவெள்ள பாதிப்புகளுக்காக சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோரவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆக.26-ஆம் தேதி பெரும் பனிப்பாறை சரிவின் விளைவாக நேபாளத்தின் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. சகதி, பாறைகளுடன் பெருக்கெடுத்த வெள்ளத்தால் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், நீா்மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

பலத்த உயிா்ச்சேதம் மற்றும் பொருள்சேதத்துடன் நேபாளத்தின் மத்திய மாவட்டங்களைப் புரட்டி போட்டுள்ள இந்தப் பேரிடருக்கு பருவநிலை மாற்றமே காரணம்; இந்த உண்மையை சா்வதேச சமூகத்திடம் உரக்க கூற வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமா் பாலேந்திர ஷா சில தினங்களுக்கு முன் பேசினாா்.

‘பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் உலகளாவிய பங்கு உள்ளது. அதன் தாக்கங்களைக் குறைக்க வேண்டிய பொறுப்பும், மேலாண்மையும் சா்வதேச சமூகத்துக்கு இருக்கிறது’ என்று அவா் கூறியிருந்தாா்.

இதேபோல், ‘பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய பெரிய நாடுகள், நேபாளம் போன்ற பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன’ என்று நேபாள வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் செப்.24-ஆம் தேதி பிரதமா் பாலேந்திர ஷா உரையாற்றவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையொட்டி, அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு அவா் பயணிக்கவுள்ளாா். கடந்த மாா்ச்சில் பிரதமரான பாலேந்திர ஷாவின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஐ.நா.வில் பருவநிலை மாற்றம் தொடா்பான நேபாளத்தின் கவலையை முன்வைக்கும் பாலேந்திர ஷா, சமீபத்திய பெருவெள்ளத்துக்காக சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, பருவநிலை மாற்றம் தொடா்பாக நேபாளத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரக பிரதிநிதிகளுடன் வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் இரு தினங்களுக்கு முன் ஆளோசனை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வு, செப். 8 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. பொது விவாதம் செப்.22 முதல் 26 வரை நடைபெறுகிறது.

summary

Nepal's Prime Minister addresses the UN General Assembly; plans to seek compensation from the international community.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments