வட கொரிய அதிபருக்கு மற்றொரு வாரிசா? விசாரிக்கும் தென் கொரியா!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மகன் இருக்கிறாரா என தென் கொரியா விசாரணை நடத்தி வருகின்றது.
வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்-க்கு ஒரு மகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு மகன் ஒருவரும் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் தென் கொரிய அரசு அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
வட கொரிய அதிபராக இருந்த கிம் ஜாங் 2011 ஆம் ஆண்டில் உயிரிழந்த பின்னர் அவரது மகனான கிம் ஜாங் உன் அதிபராகப் பதவியேற்றார். 15 ஆண்டுகளாக அதிபராகப் பதவி வகித்து வரும் அவருக்கு வாரிசாக மகள் உள்ளார். இந்த நிலையில், மகன் இருக்க வாய்ப்புள்ளதாக தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் உன்-இன் மகளான கிம் ஜூ ஏ-வுக்கு தற்போது 13 வயதாகும் நிலையில், அடுத்த அதிபராக அவரே பதவியேற்கவுள்ளார் என்பதை உறுதி செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை, அவருக்கு ஒரு மூத்த சகோதரர் இருக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
கிம்மின் மகள் பொதுவெளியில் தலைகாட்டிய நிகழ்வுகள் முதல், அவருக்கு அரசில் வழங்கப்படவுள்ளப் பொறுப்புகள் தொடர்பாக அனைத்து விவரங்களையும் தென் கொரியா விரிவாக ஆய்வு செய்து வருகின்றது.
முன்னதாக, வட கொரிய அதிபருக்கு அவரது மனைவி ரி சோல் ஜூவுடன் மகன் இல்லை என தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தேசிய புலனாய்வு சேவை அமைப்பு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் வட கொரிய ஏவுகணைத் தளங்கள், அரசு நிகழ்வுகள் அனைத்திற்கும் அதிபர் தனது மகளுடனே சென்றுள்ளார். கிம்மின் மிகவும் அன்புக்குரிய வாரிசாக அவரது மகள் இருப்பதை உலகிற்கு வெளிக்காட்டும் விதமாக வட கொரியா சார்பில் அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வட கொரியா தனி நாடாக 1948-ல் நிறுவப்பட்டது முதல், அந்நாட்டின் அதிபர்களாக இருந்த 3 பேருமே ஆண்கள். கிம் ஜாங் உன்னுக்கு முன்பு அவரது தந்தை கிம் ஜாங் இல்-உம், அவரது தாத்தா கிம் இல் சுங்-உம் அதிபராக இருந்தனர்.
வட கொரியாவில் ஆழமாக வேரூன்றிய ஆணாதிக்க சிந்தனை மற்றும் ஆண்களால் ஆளப்படும் அதிகார அமைப்பின் காரணமாக தற்போதைய அதிபரான கிம்முக்கு ஒரு மகன் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏனெனில், வட கொரியாவின் மூத்த உயர் அதிகாரிகள் ஒரு பெண்ணின் கட்டளையை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல, கிம் ஜூ ஏ வேறு குடும்பத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து, அவர்களின் குழந்தைக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால், இறுதியில் கிம் ஜாங் உன் பரம்பரையின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம், தற்போது 42 வயதான கிம் ஆட்சியை மகளிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அரசு தொடர்பான அவரது முழுமையான அதிகாரம் குறையவும் வாய்ப்புள்ளது.
South Korea is investigating whether North Korean leader Kim Jong Un has a son.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.