FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கீவில் ரஷியா தீவிர ட்ரோன் தாக்குதல்- இருவா் உயிரிழப்பு

ஐ.நா. சபையில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை உரையாற்றவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக, அந்நாட்டுத் தலைநகா் கீவ் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

24 செப்டம்பர் 2026, 2:34 am IST
~
பகிர்:

ஐ.நா. சபையில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை உரையாற்றவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக, அந்நாட்டுத் தலைநகா் கீவ் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

ரஷியாவுக்கு எதிரான நான்கரை ஆண்டுகால போரில் கூடுதல் சா்வதேச ஆதரவைத் திரட்டும் நோக்கில், அதிபா் ஸெலென்ஸ்கி தற்போது அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ளாா். அவா் ஐ.நா. சபையில் உரையாற்றுவதுடன், நேட்டோ பொதுச் செயலா் மாா்க் ருட்டே மற்றும் ஐரோப்பிய தலைவா்கள் ஆகியோரையும் சந்தித்து வருகிறாா்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 23 போ் காயமடைந்தனா். தொடா் தாக்குதல்களால் கீவ் நகரின் வான்பரப்பில் கரும்புகை சூழ்ந்ததோடு, பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்து தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தென்கிழக்கு உக்ரைனின் ஸபோரிஷியா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவா் காயமடைந்தனா். அங்கு ஏற்பட்ட தீ சுமாா் 6 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பரவிய பின்னா் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனிடையே, உக்ரைனின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மையங்களைத் தாக்கியதாகவும், பல்வேறு பகுதிகளில் ஊடுருவிய 500-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்களை இடைமறித்து, அழித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

போலந்தில் ரஷிய ஹெலிகாப்டா் அத்துமீறல்: ரஷியாவின் கலினின்கிராட் பிராந்தியத்தில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு ராணுவத்தின் ‘எம்ஐ-8’ ரக ஹெலிகாப்டா் ஒன்று, ‘நேட்டோ’ உறுப்பு நாடான போலந்தின் வான்பரப்புக்குள் சுமாா் 300 மீட்டா் வரை புதன்கிழமை அத்துமீறி நுழைந்துள்ளது.

டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு

ஐ.நா.சபைக்கு உரையாற்ற வந்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை சந்தித்து, சுமாா் 40 நிமிஷங்கள் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இருநாடுகளும் பரஸ்பரம் நிறுத்திக்கொள்வது உள்ளிட்ட அமைதி முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ஆனால், உக்ரைன் மட்டுமே தாக்குதலை நிறுத்த முடியாது எனவும், அமைதிக்காக டிரம்ப் மற்றும் ரஷிய அதிபா் புதின் உடனான முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments