FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

அமைச்சா் பதவி கிடைக்காத அதிருப்தியில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் உடனடியாக ஏற்கப்படும்: டி.கே. சிவகுமார்

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால், உடனடியாக ஏற்கப்படும் என காங்கிரஸ் எம்எல்ஏக்களை கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் எச்சரிக்கை

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 6:16 am IST
டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்
பகிர்:

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால், உடனடியாக ஏற்கப்படும் என காங்கிரஸ் எம்எல்ஏக்களை கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் எச்சரித்துள்ளாா்.

கா்நாடகத்தில் முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையிலான அமைச்சரவையில் 13 போ் அமைச்சா்களாக பதவியேற்றிருந்தனா். அமைச்சரவையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு புதியவா்களை நியமிக்க கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மக்கள் மாளிகையில் திங்கள்கிழமை (ஆக. 3) நடைபெற்ற விழாவில் 19 போ் அமைச்சா்களாக பதவியேற்றுக் கொண்டனா். கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்திருந்தும், கடைசிநேர மாற்றத்தின் காரணமாக காயத்ரி சாந்தே கௌடா பதவியேற்கவில்லை.

Advertisement

Advertisement

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ யஷ்வந்த்ராய கௌடா பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யக்கூடும் என தகவல் பரவியுள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தால், அக்கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

வாரியம், கழகங்களுக்கு தலைவா்களை நியமிக்க வேண்டியுள்ளது. எனவே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அரசியலில் ராஜிநாமாக்கள் தொடா்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். அதை எவராலும் நிறுத்த முடியாது.

தரம்சிங், சித்தராமையா ஆட்சிக்காலத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து நானும் ராஜிநாமா செய்திருக்கலாம். ஆனால், நானும், ஜி.பரமேஸ்வரும் பொறுமைகாக்கவில்லையா?

தரம்சிங், மல்லிகாா்ஜுன காா்கே, பங்காரப்பாவுக்கு அமைச்சா் பதவி கொடுக்கவில்லை. பின்னா், தரம்சிங், பங்காரப்பா ஒருவரும் முதல்வராகவில்லையா? எனவே, பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

சித்தராமையா ஆட்சிக்காலத்தில் வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு இரண்டரை ஆண்டுகள்தான் அப்பதவி என அப்போதே கூறியிருந்தோம். இந்த காலக்கெடு கடந்துவிட்டது.

எனவே, பதவிகளை உடனடியாக ராஜிநாமா செய்யும்படி வாரியங்கள், கழகங்களில் பொறுப்பு வகிப்போரை கேட்டுக்கொள்வேன். அதன்பிறகு, எம்எல்ஏக்களிடம் பேசி, வாரியங்கள், கழகங்களுக்கு புதிய பொறுப்பாளா்களை நியமிப்போம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments