காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாஜகவில் சேருவார்கள்: எடியூரப்பா
காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரைவில் பாஜகவில் சேருவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவரும், கர்நாடக எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரைவில் பாஜகவில் சேருவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவரும், கர்நாடக எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாபுராவ்
சின்சன்சூர் காங்கிரஸில் விலகி எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியது:-
கலபுர்கி மாவட்டத்தை உள்ளடக்கிய ஹைதராபாத், கர்நாடகப் பகுதியில் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவருகிறார்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜக தோற்கடிக்கும்.
பாஜகவில் பாபுராவ் சின்சன்சூர் சேர்ந்துள்ளதால், மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் கர்நாடகத்தைச் சேர்ந்த மாவட்டங்களில் பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேபோல, காங்கிரஸின் முக்கியமான தலைவர்களும் தோற்கடிக்கப்படுவார்கள். காங்கிரஸை சேர்ந்த பல முன்னணித் தலைவர்கள் பாஜகவின் தொடர்பில் இருக்கிறார்கள்.
காங்கிரஸின் பல முன்னணி தலைவர்கள் பலரும் விரைவில் பாஜகவில் சேரவிருக்கிறார்கள். இவர்களை போலவே பல அரசு அதிகாரிகளும் பதவிகளை துறந்து பாஜகவில் சேரவிருக்கிறார்கள்.
நில விடுவிப்பு முறைகேடு வழக்கு: நில விடுவிப்பு முறைகேடு வழக்கில் இருந்து, என்னை (எடியூரப்பா) நீதிமன்றம் விடுவித்துள்ளது. இன்னும் சில வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்படுவேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது.
நிவாரணப் பணிகள்: குடகு மாவட்டத்துக்கு சரியான நிவாரண உதவிகளை வழங்க கர்நாடக அரசு தவறியுள்ளது. மண்டகேரி கிராமம் முழுவதும் நாசமாகியுள்ளது. அதேபோல, ஹெப்பெட்டுகேரி, உதயகிரி, ஜோளுபாளு கிராமங்கள் சேதமடைந்துள்ளன.
நடுத்தர குடும்பங்கள் வாழ்ந்துவந்த பல கிராமங்கள் அழிந்துள்ளன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நிவாரணப்பணிகளை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு ஆமை வேகத்தில் உள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு இது. வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் அரசுக்கு ஆர்வமில்லை.
அரசு செயல்படுவதை போன்ற உணர்வே ஏற்படவில்லை. பல மாவட்டங்களில் வெள்ளம், இன்னும் பல மாவட்டங்களில் வறட்சி. ஆனால் மக்களின் குறைகளை களைய மாநில அரசு முற்படவில்லை.
குடகு மாவட்டத்தில் நிவாரணப்பணிகளை செயல்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீத்தாராமன் நிதி ஒதுக்கியுள்ளார்.
சில நாள்களில் மத்திய அரசிடம் இருந்தும் நிதிஉதவி அறிவிக்கப்படும்.
தொலைபேசிகள் ஒட்டு கேட்பு: எனது (எடியூரப்பா), முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் செல்லிடப்பேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.