கர்நாடக மாநில காங்கிரஸின் தலைவராகிறார் எச்.கே.பாட்டீல்?
கர்நாடக மாநில காங்கிரஸின் தலைவராக முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீலை நியமிப்பது குறித்து கட்சி மேலிடம் யோசித்து வருகிறது.
கர்நாடக மாநில காங்கிரஸின் தலைவராக முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீலை நியமிப்பது குறித்து கட்சி மேலிடம் யோசித்து வருகிறது.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்வராக இருக்கும் ஜி.பரமேஸ்வர், கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் கட்சித் தலைவர் பதவியை துறக்கும் நிலைக்கு ஜி.பரமேஸ்வர் தள்ளப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியை வழிநடத்தக் கூடிய அனுபவம் கொண்ட, கூட்டணி கட்சியான மஜதவை சமாளிக்கக்கூடிய திறன்வாய்ந்த ஒருவரை தலைவராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் யோசித்து வருகிறது.
கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு எச்.கே.பாட்டீல், டி.கே.சிவக்குமார், டி.பி.ஜெயசந்திரா, தினேஷ்குண்டுராவ், கே.எச்.முனியப்பா, பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்டோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இளைஞர்களான தினேஷ்குண்டுராவ், கிருஷ்ணபைரே கெளடா இருவரில் ஒருவரை மாநிலத் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி விரும்பியிருந்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் இணக்கமாக வழிநடத்தி செல்லும் தேவெ கெளடா போன்ற மூத்த தலைவர்களின் தலைமையில் இயங்கும் மஜதவை கையாளக்கூடிய திறமை படைத்த மூத்த தலைவர் ஒருவரை கட்சித் தலைவராக நியமிக்கலாம் என்று கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமார், டி.பி.ஜெயசந்திரா ஆகியோரில் ஒருவரை தலைவராக்க அவர்களது சமுதாயத்தினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல யோசனைகளை ஏற்றுக்கொண்டுள்ள ராகுல் காந்தி, கட்சியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீலை மாநிலத் தலைவராக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வட கர்நாடகத்தின் லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்த எச்.கே.பாட்டீல், அப்பதவிக்கு தகுதியானவர் என்றும் ராகுல் காந்தி கருதுவதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பதவி வழங்காததற்கு அதிருப்தி தெரிவித்திருந்த எச்.கே.பாட்டீல், அண்மையில் புது தில்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து திரும்பியிருக்கிறார். எச்.கே.பாட்டீலை தலைவராக்க கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தனக்கு கட்சித் தலைவர் பதவியைக் காட்டிலும், அமைச்சர் பதவி தருமாறு ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டதால் எச்.கே.பாட்டீலுக்கு கட்சித் தலைவர் பதவி வாய்க்கவிருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய தலைவராக பதவியேற்க இருக்கும் எச்.கே.பாட்டீலுக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்காக கட்சியை தயார்படுத்த வேண்டியுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலை மஜதவுடன் கூட்டணி அமைத்து சந்திக்க இருப்பதால், அதை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கூட்டணி ஆட்சி என்பதால் பொது செயல்திட்டத்தை தீவிரமாக செயல்பட
வேண்டியுள்ளது.
இதுபோன்ற பணிகளை எச்.கே.பாட்டீல் கச்சிதமாக செய்வார் என்ற நம்பிக்கை ராகுல் காந்திக்கு உள்ளது. எனவே, இதற்கான அறிவிப்பை ராகுல் காந்தி ஓரிரு நாள்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.