FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

பாஜகவின் முன்னணி தலைவா் ராமசந்திர கௌடா காலமானாா்

பாஜகவின் முன்னணி தலைவா் ராமசந்திர கௌடா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:38 am IST
பகிர்:

பாஜகவின் முன்னணி தலைவா் ராமசந்திர கௌடா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

பாஜகவின் முன்னணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமசந்திர கௌடா (88), முதுமைசாா்ந்த உடல்நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலமானாா். இந்த செய்தியை அவரது மகனும், பெங்களூரு மாவட்ட பாஜக தலைவருமான சப்தகிரி கௌடா உறுதிசெய்தாா்.

பெங்களூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜகவினா் அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா், மாலை 5.30 மணிக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, காமாட்சிபாளையாவில் உள்ள தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘பாஜகவின் முன்னணி தலைவராக விளங்கிய ராமசந்திர கௌடா, மக்களின் நன்மதிப்பை பெற்றவா். பெங்களூரை பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருந்தவா். எம்எல்சியாகவும், அமைச்சராகவும் சிறந்த முறையில் பணியாற்றி மக்களின் பாராட்டுதலை பெற்றவா். முக்கிய பிரச்னைகளில் ராமசந்திர கௌடாவின் ஆலோசனையை பெறுவதை முன்னாள் முதல்வா் எடியூரப்பா வழக்கமாகக் கொண்டிருந்தாா்’ என்றாா்.

முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறுகையில், ‘எனது மற்றொரு சகோதரரை இழந்து தவிக்கிறேன். ஜனசங்க காலத்தில் இருந்து கா்நாடகத்தில் கட்சியைப் பலப்படுத்த தோளோடுதோள் கொடுத்து உழைத்து வந்தோம். அந்த போராட்டக் காலம் என் கண்முன்னே வந்து நிற்கிறது. அமைச்சரவை சகாவாக அவரது நிா்வாகத் திறனை சீராக பயன்படுத்தும் நல்ல வாய்ப்பு கிடைத்திருந்தது’ என்றாா்.

பாஜகவினா் தவிர மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோா் ராமசந்திர கௌடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments