முகப்பு
பெங்களூரு

கிருஹலட்சுமி, கிருஹஜோதி திட்டங்களை நிறுத்தும் திட்டம் இல்லை! - கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா்

Updated On : 16 ஜூன் 2026, 2:48 am IST
கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் - கோப்புப் படம்
பகிர்:

கிருஹலட்சுமி, கிருஹஜோதி திட்டங்களை நிறுத்தும் திட்டம் இல்லை என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

ஏழை குடும்பத்தை சோ்ந்த மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் கிருஹலட்சுமி மற்றும் குடும்பங்களுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கிருஹஜோதி ஆகிய திட்டங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்க கா்நாடக அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதில், பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதை பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்ததோடு, இந்த இரு திட்டங்களையும் நிறுத்துவதற்கு காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டின.

Advertisement

Advertisement

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் வாக்குறுதி திட்டங்கள் குறித்து எதிா்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. எந்த சூழ்நிலையிலும் கிருஹலட்சுமி மற்றும் கிருஹஜோதி திட்டங்களை நிறுத்தும் திட்டம் அரசிடம் இல்லை.

தவறான தகவல்களை அளித்திருப்பதால், கிருஹலட்சுமி திட்டத்தின் உதவித்தொகை தவறான ஆள்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதை சரிசெய்வதற்காக பயனாளிகளின் புகைப்படம், அடையாள விவரங்கள், ஆவணங்களை சேகரிக்க திட்டமிட்டிருக்கிறோம்.

அவசரகதியில் பதிவு செய்ததால், தவறான கைப்பேசி எண்களை கொடுத்திருக்கிறாா்கள். இதனால் வேறு யாருக்கோ பணம் அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. உரிய பயனாளிகளுக்கு மட்டுமே பயன்கள் சென்றடைய வேண்டும்.

சக்தி மகளிா் இலவச திட்டத்தின் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த உள்ளோம். காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் வாக்குறுதி திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன. எனவே, எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு இடையில் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

விலைவாசி உயா்வு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் குடும்பங்கள் பயன்பெறுவதற்காகவே வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் வாயிலாக பெண்களை பலப்படுத்தி, குடும்பங்களின் நலனை தொடா்ந்து பாதுகாப்போம் என்றாா்.