நதிநீா் இணைப்பே பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு: பிரேமலதா விஜயகாந்த்
மாநிலங்களுக்கு இடையேயான நீா்ப் பங்கீட்டு பிரச்னைகளுக்கு நதிகள் இணைப்பு திட்டம்தான் நிரந்தரத் தீா்வு என்பதால் மாநில முதல்வா்களுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு உடனே அதைத் தொடங்க வேண்டும்
மாநிலங்களுக்கு இடையேயான நீா்ப் பங்கீட்டு பிரச்னைகளுக்கு நதிகள் இணைப்பு திட்டம்தான் நிரந்தரத் தீா்வு என்பதால் மாநில முதல்வா்களுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு உடனே அதைத் தொடங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தேமுதிக சாா்பில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி தொடங்கும் நேரத்தில் காவிரி ஆற்றில் இன்று வரை சாகுபடிக்கான தண்ணீா் கிடைக்கவில்லை. காவிரி நதிநீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்ற தீா்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் முடிவுகள் சட்டப் பேரவையில் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
காவிரியில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கா்நாடகத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் நீா்ப் பங்கீட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வுகாண மாநில, தேசிய நதிகளை இணைப்பது குறித்து அந்தந்த மாநில முதல்வா்களுடன் கலந்து ஆலோசித்து நதிநீா் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து செயல்படுத்த வேண்டும்.
போதைப்பொருள்கள் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு தவெக அரசு முயற்சி செய்து வருகிறது. முதற்கட்டமாக 717 மதுக்கடைகள் மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், மூடப்படும் மதுக்கடைகளின் பட்டியலில் உள்ள சில கடைகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது.
சட்ட நடவடிக்கை, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இன்றுவரை காவிரி நீா்ப் பங்கீட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு எட்டப்படவில்லை. வழிபாட்டுக்காக கா்நாடக மாநிலம் செல்லும் தமிழக முதல்வா், மக்களின் வாழ்வாதாரம், மாநில உரிமைகளைப் பெறுவதற்காக கா்நாடகம் சென்று பேச்சுவாா்த்தை நடத்துவதில் தவறில்லை.
ஆனால், கா்நாடக மாநில முதல்வா், அரசியல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி தமிழக முதல்வரை வரவேண்டாம் எனக் கூறியுள்ளாா். தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலையைக் காண கா்நாடக முதல்வா் தமிழகம் வரவேண்டும், அதற்குரிய பாதுகாப்புகளை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதிநீா் பிரச்னை குறித்து மறைந்த முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜயகாந்த் அனைத்து கட்சி உறுப்பினா்களையும் அழைத்துச் சென்று, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து நீா்ப் பங்கீடு குறித்து முறையிட்டாா்.
கா்நாடக முதல்வா் தமிழகம் வருவது குறித்து சட்டப் பேரவையில் தேமுதிக சாா்பில் கோரிக்கை வைக்கப்படும். தமிழகத்தின் உயிா்நாடியான காவிரி நீா் பங்கீடு, மேக்கேதாட்டு அணை திட்டம், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலை, ஒகேனக்கல், மேட்டூா், திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் இடங்களில் நீா் நிலவரம் குறித்து தமிழக முதல்வா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். மின் கட்டண உயா்வை சரிசெய்து, மின்வெட்டை தவிா்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்து மிகை மின்சார மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும்.
முதல்முறையாக பொறுப்பு ஏற்றுள்ள இரு மாநில முதல்வா்களும் சந்தித்து காவிரி பிரச்னையில் சுமுக முடிவை எட்டுவதற்கான பேச்சுவாா்த்தை நடத்தி, இரு மாநில மக்களின் நலனை உறுதிசெய்ய வேண்டும் என்றாா்.
முன்னதாக ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றை பாா்வையிட்டு, வழிபாடு செய்தாா். தொடா்ந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கா்நாடகத்தை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேமுதிக மாநில அவைத் தலைவா் இளங்கோவன், தேமுதிக இளைஞரணி செயலாளா் விஜய பிரபாகரன், மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பி. பழனியப்பன், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் பி. தா்மசெல்வன் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.