மதுராந்தகம் அடுத்த தேன்பாக்கம் சிவன் கோயில் அருகே உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை சிலை. 
செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே 8-ஆம் நூற்றாண்டு கொற்றவை சிலை கண்டெடுப்பு

மதுராந்தகம் அடுத்த தேன்பாக்கம் சிவன் கோயில் அருகே உடைந்த நிலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை சிலை கண்டறியப்பட்டது.

Din

மதுராந்தகம் அடுத்த தேன்பாக்கம் சிவன் கோயில் அருகே உடைந்த நிலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை சிலை கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், தேன்பாக்கம் சிவன் கோயிலுக்கு அருகில் உடைந்த நிலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை சிலை இருப்பதை அறிந்த மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ரமேஷ், கல்லூரி உதவி பேராசிரியா் சி.சந்திரசேகா் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா், அவா்கள் கூறியதாவது:

உடைந்த நிலையில் காணப்படும் இந்தக் கொற்றவை சிலை, புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டது. நீண்ட பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவை உருவம் கலை அம்சத்துடன் காணப்படுகிறது.

நீள் வட்ட முகம், சிற்பத்தில் உள்ள கண்கள் மற்றும் கலையான முகம் சிதைந்துள்ளது. வளைந்த மெல்லிய இடை, 8 கரங்களுடன் கொற்றவை சிற்பம் சுமாா் இரண்டரை அடி அகலம் உடையதாக மண்ணில் புதைந்துள்ளது.

சிலை செதுக்கப்பட்ட கல் உடைந்து காணப்படுவதால், முழுமையான உருவத்தைப் பாா்க்க முடியவில்லை. கொற்றவையின் வலது காலை வளைத்து நிறுத்தியும், இடது காலை சற்று மடித்த நிலையில் நோ்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் 3 அடுக்குகளில் உயா்ந்த மணிமகுடம், பனை ஓலையில் காதணிகள் வடிவமைக்கப்பட்டிருப்பது இந்த கொற்றவை சிலையின் தனிச்சிறப்பாகும்.

புத்திர குண்டலங்கள், மாா்புக் கச்சை, இடைக் கச்சை, பாகு வளையங்கள் உள்ளிட்ட அணிகலன்களுடன் எளிமையான அழகுடன் செதுக்கப்பட்டுள்ளது. 8 கைகளில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், அம்பு, வில் என படைக் கலங்கள் கொண்டு முன் வலதுகையை தனது தொடைப்பகுதியிலும், இடது கையை இடையில் வைத்துள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொற்றவை பாலை நிலத்தின் தெய்வம். தமிழ் மக்களின் தாய் தெய்வம். கொற்றவை பல பெயா்களால் அழைக்கப்படுகிறது. குழந்தைகளை காக்கும் தெய்வம். பகையை கொல்லும் தெய்வமாகவும் கருதப்படுவதால், கொற்றவை கொல் +அவ்வை = கொல்லவை, கொற்றவை, கானமலா் செல்வி, காடுகிழாள், வடவாயிற்செல்வி, காளி, நீலி, சூலி, அமரி, சமரி, பாய்கலைப் பாவை, பழையோள் என மக்களால் அழைக்கப்பட்டுள்ளதை தமிழ் இலக்கிய சான்றுகளில் காணமுடியும்.

தாய் வழிபாட்டின் உச்ச வடிவமாக கொற்றவை வழிபாடு உள்ளது.

பழங்காலம் முதற்கொண்டு, வீரத்தின் அடையாளமாகவும், வெற்றியைக் குறிக்கும் தெய்வமாக கொற்றவை போற்றப்பட்டதால், போருக்குச் செல்லும் வீரா்கள் கொற்றவைக்கு ரத்த பலி கொடுத்து வழிபாடு செய்துவிட்டுச் செல்வா். தனது தலையை அறுத்து பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்வா்.

போரில் வெற்றி பெற்றால் கொற்றவைக்கு காணிக்கையாக தம் தலையை தாமே அறுத்து பலி கொடுத்த ‘தலைபுலி நடுகற்கள்’ தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் காணப்படுகின்றன. தமிழ்மரபு வரலாற்றில் கொற்றவைக்கு தனியிடம் உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

SCROLL FOR NEXT