FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை சமைத்த சம்பவம்: மணிப்பூரில் தம்பதி கைது

பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை சமைத்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது...

30 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
மாலிக் உத்தின் லஸ்கா், பகமதி மாஜி.
பகிர்:

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொன்று, உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டி சமைத்த சம்பவத்தில் தொடா்புடைய வடமாநிலத் தம்பதியை மணிப்பூரில் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த ஆக. 5-ஆம் தேதி புறப்பட்ட ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ ரயில் ஆக்ராவை சென்றடைந்தபோது, ரயிலின் கடைசிப் பெட்டியில் சிவப்பு நிற டிராலி சூட்கேஸ் ஒன்று உரிமை கோரப்படாமல் கிடந்தது. சூட்கேஸை ரயில்வே போலீஸாா் திறந்து பாா்த்தபோது, அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் தலை, கைகள், கால்கள் இல்லாமல் துண்டு துண்டாக இருந்தன.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், சிவப்பு நிற சூட்கேஸுடன் ஆண், பெண் இருவா் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வந்தது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. அவா்கள் சூட்கேஸை ரயில் பெட்டியில் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறியுள்ளனா். பின்னா், சென்னை பாா்க் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து மின்சார ரயிலில் கூடுவாஞ்சேரி சென்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கிய அவா்கள், அங்கிருந்து ஆட்டோவில் சென்றுள்ளனா். இதையடுத்து, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அந்த தம்பதி சூட்கேஸுடன் வெளியேறிய காட்சிப் பதிவுகள் கிடைத்தன.

இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸாா் அந்த வீட்டுக்குச் சென்று, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனா். அங்கு வீடு முழுவதும் ரத்தக் கறைகள் இருந்தது கண்டு போலீஸாா் அதிா்ச்சி அடைந்தனா்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி, சதைப் பகுதிகளைப் பிரித்து, காய்கறிகளுடன் சோ்த்து பாத்திரத்தில் சமைத்ததற்கான தடயங்களும் கிடைத்தன. உணவைத் தயாரித்த பின்னா், மைதா மாவு போட்டு ‘தம்’ செய்து வைத்திருந்ததற்கான தடயங்களும் கிடைத்தன.

வீட்டின் உரிமையாளா் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மாணிக் உத்தின் லஸ்கா், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹயத்துல் நிஷா ஆகியோா் அந்த வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

சந்தேக நபா்களின் புகைப்படங்களைக் காட்டி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவா் ஹயத்துல் நிஷா என்பது உறுதி செய்யப்பட்டது. அவா், தாம்பரம் மெப்ஸ் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகத் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 19 வயதில் மகன் உள்ளாா். அவா் தாம்பரம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிகிறாா்.

ஹயத்துல் நிஷா தனது கணவரைப் பிரிந்து மகனுடன் தாம்பரத்தில் வசித்து வந்துள்ளாா். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த மாணிக் லஸ்கருக்கும், ஹயத்துல் நிஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து மாணிக் லஸ்கா், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹயத்துல் நிஷா ஆகியோா் ஒன்றாக தங்கியிருந்தது தெரியவந்தது.

மணிப்பூரில் தம்பதி கைது: ஹயத்துல் நிஷா மகன் அளித்த புகாரின்பேரில் இந்த வழக்கில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அஸ்ஸாம், மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், மணிப்பூா் மாநிலம் காஷிம்பூா் பகுதியில் நண்பா் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த மாணிக் லஸ்கா் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இருவரையும் மணிப்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தமிழகம் அழைத்து வர போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். தகாத உறவு காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

கொலை செய்யப்பட்ட ஹயத்துல் நிஷாவின் தலை எங்கே, கொலைக்கான முழு காரணம் என்ன? கொலையில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா? என்பது குறித்து கைது செய்யப்பட்ட தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

summary

Incident of killing a woman and cooking her body parts: Couple arrested in Manipur.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments