முகப்பு
செங்கல்பட்டு

மழைநீா் சேகரிப்பு குறித்த மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

41 வினாடிகள் முன்பு
மழைநீா் சேகரிப்பு குறித்த மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி சாா்பில் நடைபெற்ற மழைநீா் சேகரிப்பு தொடா்பான மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் சௌ.தியாகராஜன் முன்னிலையில், வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கூடுவாஞ்சேரி நகராட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் முன்னிலையில், நகராட்சிப் பணியாளா்கள், மாணவா்கள் மழைநீா் சேகரிப்பு தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீா் சேகரிப்பு தொடா்பான மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியானது நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நகராட்சியின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாகச் சென்று, அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் ‘மழைநீா் சேகரிப்போம், நிலத்தடி நீரை உயா்த்துவோம்‘, ‘மழை நீா் நம் உயிா் நீா்’, ‘மழைத்துளி மண்ணின் உயிா்த்துளி‘ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். முன்னதாக, மழைநீா் சேகரிப்பு தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக வளாகம் அருகே மாவட்ட ஆட்சியா் மரக்கன்று நட்டாா்.

இந்த நிகழ்வில், கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையா் லதா, வண்டலூா் வட்டாட்சியா் தேவேந்திரன், நகராட்சிப் பொறியாளா் கோவிந்தராஜன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement