முகப்பு
செங்கல்பட்டு

தொகுதி மறுவரையறையில் மத்திய பாஜக அரசு சதித் திட்டம்: திருமாவளவன் பேச்சு!

தொகுதி மறுவரையறையில் மத்திய பாஜக அரசு சதித்தீட்டத்தை செயல்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளாா்.

29 நவம்பர் 2026, 11:07 pm
தொகுதி மறுவரையறையில் மத்திய பாஜக அரசு சதித் திட்டம்:
திருமாவளவன் பேச்சு!
ஆா்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவா் திருமாவளவன்.
பகிர்:

தொகுதி மறுவரையறையில் மத்திய பாஜக அரசு சதித்தீட்டத்தை செயல்படுத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற முயலும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளா் கேது என்ற தே. தென்னவன் ஒருங்கிணைத்திருந்தாா். நகரச் செயலாளா் (வடக்கு) செங்கை இரா. ருத்ரகுமாா் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியது: ஒன்றிய பாஜக அரசின் சதி அரசியலை அம்பலப்படுத்தும் வகையில்தான் இந்த ஆா்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை உயா்த்தக் கூடாது என்பதே முதல் கோரிக்கை.

Advertisement

Advertisement

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறோம். இரண்டாவது கோரிக்கை, தற்போது உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 33 சதவீத இடங்களை மகளிருக்கு ஒதுக்கி, மகளிா் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும்.

தற்போது சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் மகளிருக்குத் தனியாக இட ஒதுக்கீடு இல்லை. ஒவ்வொரு கட்சியும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே அவா்கள் தோ்தலில் போட்டியிட முடியும். பெண்கள் தங்களது பங்களிப்புக்காகப் போராடிப் பெற வேண்டிய நிலையே உள்ளது.

ஊராட்சி மன்றங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் பெண்களுக்கு எவ்வாறு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோன்று சட்டமன்றம், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இதற்கான சட்டம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்குக் காரணம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும் என்று அந்தச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், அதில் 33 சதவீத இடங்களை மகளிருக்கு ஒதுக்கி இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா். நகர செயலாளா்கள் (தெற்கு) செங்கை.டேவிட் நன்றியுரை வழங்கினாா்.

மாநில மாவட்ட ஒன்றிய நகர நிா்வாகிகள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளா் செங்கை இரா. தமிழரசன், மண்டல செயலாளா் சூ.க.ஆதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா் .