முகப்பு
சென்னை

மின் ஆளுமை முறையால் வேலைவாய்ப்பு பதிவுக்கு இனி கட்டணம்!

சென்னை, ஆக. 31: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மின் ஆளுமை மயமாக்கப்படுவதால், தனியார் இணையதள மையங்களுக்குச் சென்று ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு அட்டை பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்ப

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:19 PM
பகிர்:

சென்னை, ஆக. 31: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மின் ஆளுமை மயமாக்கப்படுவதால், தனியார் இணையதள மையங்களுக்குச் சென்று ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு அட்டை பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வேலைதேடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களின் பல்வேறு கல்விச் சான்றிதழ்களை பதிவு செய்ய, அரசு இதுவரை அளித்து வந்த இலவச சேவை, இனி கட்டணச் சேவையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் மின் ஆளுமை மயமாக்கப்பட உள்ளன.

எல்காட் நிறுவனத்தின் சார்பில் எம்பவர் எனப்படும் பிரத்யேக மென்பொருள் (சாஃப்ட்வேர்) உதவியுடன் இந்தத் திட்டம்  2.75 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. மென்பொருளை உருவாக்கிய உதவியாளர்: இதுவரை வேலைவாய்ப்புத் துறையில் எஸ்.ஜி.டி. (செகண்டரி கிரேட் டீச்சர்ஸ்) என்ற மென்பொருள்தான் அதிகாரப்பூர்வமானதாக நடைமுறையில் உள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் குறித்த விவரங்களைத் தொகுக்க உதவியதால் இந்த மென்பொருள் இதே பெயரில் அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு மென்பொருள்களை  வேலைவாய்ப்புத் துறையில் பணியாற்றும் சாதாரண உதவியாளர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ஆனால், இவருக்கு இதுவரை எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.

மென்பொருள் வடிவமைப்பதில்,இவரைப்போல திறமையான அலுவலர்கள் பலர் உள்ளபோதும், மின் ஆளுமை திட்டத்துக்கான மென்பொருள் வடிவமைக்கும் குழுவில் இவர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், அன்றாடப் பணிகள் தொடர்பாக கணினியைக் கையாளுவதில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து மின் ஆளுமை திட்ட செயலாக்கத்தின் போது அலுவலர்கள் தங்களது கருத்துகளை எடுத்துக் கூற இயலாத நிலை உள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 387 காலியிடங்களை நிரப்பாத நிலையில், நெரிசலைக் குறைக்க மின்-ஆளுமை மயமாக்கும் திட்டம் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

கட்டணமயமாகிறது: நாடு முழுவதும் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு சேவை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், மின் ஆளுமை திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின் மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே உள்ள தனியார் இணையதள மையங்களுக்கு (பிரவுசிங் மையங்கள்) சென்று, ஸ்கேன் எடுத்து, ஆன்லைனில் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பெற முடியும்.

முதலில் விண்ணப்பித்தவுடன் தாற்காலிக பதிவு எண் வழங்கப்படும். 6 நாள்களுக்குப் பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் நிரந்தரப் பதிவு எண்ணுடன் பதிவுச் சான்று வழங்கப்படும்.

இதனால் கணினி வசதியில்லாத கிராமப்புற மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவு செய்ய ஸ்கேன் மற்றும் பிரவுசிங் கட்டணமாக தலா  200 வரை குறைந்தபட்சம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். கிராமங்களில் இதற்காக மாணவ, மாணவிகள் அலைக்கழிக்கப்படும் நிலையும் உள்ளது.

எனவே, மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், தனியார் பிரவுசிங் மையங்களில் கட்டண வசூல் காரணமாக மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாணவர்கள் முற்றுகையிடும் நிலை ஏற்படும். இதனால், நெரிசல் பிரச்னை தீராது.

தமிழகத்தில் கிராமப்புற பி.பி.ஓ.க்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதற்கு மாற்றாக, பிரவுசிங் மையங்களை நடத்த மகளிர் குழுக்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம்.

மாணவர்களின் ஆன்லைன் பதிவு எண்ணிக்கையின் அடிப்படையில், அதற்கான கட்டணத்தை இந்த பிரவுசிங் மையங்களுக்கு அரசே வழங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.