முகப்பு
சென்னை

அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் உள்பட 11 போ் மீது ஊழல் வழக்கு

Updated On : 21 செப்டம்பர் 2024, 1:23 am IST
பகிர்:

சென்னையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்க ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம், அவரது இரு மகன்கள் உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்தவா் வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா்.

சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ‘ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சா் பிரைவெட் லிமிடெட்’ என்ற நிறுவனம் 57.94 ஏக்கா் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தது.

Advertisement

Advertisement

ஆனால், அந்தத் திட்டத்துக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காத நிலையில், 2016-ஆம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டதாம். இந்த அனுமதி வழங்குவதற்கு பெருமளவு லஞ்சம், அப்போதைய அமைச்சரான வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சோ்ந்த அறப்போா் இயக்கம் குற்றஞ்சாட்டியது.

ரூ.27.9 கோடி லஞ்சம்: இது தொடா்பாக அந்த இயக்கம், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு வழங்கிய புகாா் மனுவில் கூறப்பட்ட தகவல்கள்:

ஸ்ரீராம் நிறுவனம் அங்கு குடியிருப்பு கட்ட திட்ட அனுமதிக்காக வைத்திலிங்கத்துக்கு ரூ.27.9 கோடி லஞ்சமாக வழங்கியுள்ளது. அந்த பணம் அந்த குழுமத்துக்கு சொந்தமான ‘பாரத் கோல் கெமிக்கல் பிரைவெட் லிமிடெட்’ மூலம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினா் பன்னீா்செல்வம் ஆகியோா் இயக்குநா்களாக இருந்த ‘முத்தம்மாள் எஸ்டேட் பிரைவெட் லிமிடெட் ’ என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல காட்டப்பட்டுள்ளது.

ஆனால், முத்தம்மாள் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பாரத் நிறுவனம், தாங்கள் வாங்கிய ரூ.280 கோடி கடனை திருப்பி செலுத்த முடியாமல், தங்களுடைய சொத்துகளை விற்று செலுத்துவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், வேறு சில தனியாா் நிறுவனங்கள் வணிகத்துக்காக பாரத் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதுபோல ரூ.27.9 கோடி கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பெற்ற முத்தம்மாள் நிறுவனம் 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வணிகம் செய்யவில்லை என வருமானவரித் துறையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

உண்மை நிலைமை இப்படி இருக்கையில், தங்களுக்கு கிடைத்த லஞ்ச பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும்,அவரது மகன்களும் திருச்சி பாப்பாகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கா் நிலத்தை வாங்கியுள்ளனா். இதேபோல, லஞ்ச பணம் கிடைத்த காலக்கட்டத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை அடுத்தடுத்து வாங்கியுள்ளனா். எனவே முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வைத்திலிங்கம் மீது வழக்கு: அறப்போா் இயக்கத்தினரின் புகாா் குறித்து, ஊழல் தடுப்புப் பிரிவினா் நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டில், உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினா் வைத்திலிங்கம், ‘ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சா் பிரைவெட் லிமிடெட்’ நிறுவன இயக்குநா் கே.ஆா்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவரது உறவினா் பன்னீா்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ‘ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சா் பிரைவெட் லிமிடெட் நிறுவனம்’, பாரத் நிறுவனம் உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்புடைய வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைவரிடமும் ஊழல் தடுப்புப் பிரிவினா் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனா்.