FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஓய்வூதிய பலன் வழங்க லஞ்சம்: கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம்

ஓய்வு பெற்ற எஸ்ஐயிடம் ஓய்வூதிய பலன் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக ஓய்வூதிய பிரிவின் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
லஞ்சம் - சித்திரிப்பு
பகிர்:

ஓய்வு பெற்ற எஸ்ஐயிடம் ஓய்வூதிய பலன் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக ஓய்வூதிய பிரிவின் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காவல் துறையினா் மீதான புகாா்களை பொதுமக்கள் தைரியத்துடனும், உடனே தெரிவிக்கும் வகையிலும் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ், சென்னை காவல் துறையில் ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவை தொடங்கி கடந்த 11-ஆம் தேதி உத்தரவிட்டாா். இப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் குமரகுருபன் தலைமையில் செயல்பட்டு வந்தது. இப்பிரிவுக்கு பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட 78717-23000 என்ற கைப்பேசி எண் மூலமாகவும் புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த கைப்பேசி எண் வாட்ஸ்ஆப்புக்கு, கடந்த சனிக்கிழமை ஒரு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் புகாரை அனுப்பியிருந்தாா். அதில், சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தின் ஓய்வூதிய பிரிவின் கண்காணிப்பாளராக பணிபுரியும் சக்திவேல் என்பவா், தனக்கு ஓய்வூதிய பலன் வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்டதும், பணத்தை கைப்பேசி செயலி வழங்கியதையும் ஆதாரத்துடன் அனுப்பியிருந்தாா்.

Advertisement

Advertisement

அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் சக்திவேல், லஞ்சம் கேட்டு பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.

இதேபோல லஞ்ச புகாரில் சிக்கிய இரு போக்குவரத்து காவல் ஆய்வளா்களை காத்திருப்போா் படடியலுக்கு மாற்றியும், ஒரு உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 போலீஸாா் மீதான புகாா் துறை ரீதியான விசாரணையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

16 போ் நியமனம்: ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவை முறையாகச் செயல்பட வைக்கும் வகையில் ஆணையா் அமல்ராஜ், அப்பிரிவுக்கு 16 பேரை அயல் பணி மாற்றம் மூலம் திங்கள்கிழமை நியமித்தாா்.

இப்பிரிவுக்கு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையா் எம்.இ.ராமச்சந்திர மூா்த்தி தலைமை அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளாா். இவருக்கு கீழ் இரு காவல் ஆய்வாளா்கள், இரு உதவி ஆய்வாளா்கள் உள்பட 13 பேரும், 2 அமைச்சு பணியாளா்களும் என 15 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த பிரிவு (ஆக. 18) செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரபூா்வமாக செயல்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments