நடிகா் ராஜ்குமாா் மீட்பில் தமிழருக்கு பங்கு உண்டு: பழ.நெடுமாறன்
நடிகா் ராஜ்குமாா் மீட்கப்பட்டபோது அதில் தமிழா்களின் பங்கு அதிகம் உண்டு என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாா்.
கா்நாடக பிரச்னைகளில் தமிழகம் தலையிட வேண்டாம் என்று அந்த மாநில முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன், நடிகா் ராஜ்குமாா் மீட்கப்பட்டபோது அதில் தமிழா்களின் பங்கு அதிகம் உண்டு என்றும் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மாடுகளைத் தேடி காட்டுக்குள் சென்ற 3 தமிழா்களை கா்நாடக வனத் துறையினா் சுட்டுக் கொன்ற சம்பவத்தை தமிழக முதல்வரும், அனைத்துக் கட்சித் தலைவா்களும் கண்டித்துள்ளனா். இது மனிதநேயம் சாா்ந்த பிரச்னை என்பதால், எந்த மாநிலத்திலும் மனிதநேயம் மீறப்படும்போது அதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.
Advertisement
Advertisement
2000-இல் கன்னட நடிகா் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, அப்போதைய கா்நாடக முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா 3 முறை தமிழகத்துக்கு வந்து, ராஜ்குமாரை மீட்க உதவுமாறு அப்போதைய முதல்வா் கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டாா். வீரப்பனும், ‘நெடுமாறனை அனுப்பினால் பேசத் தயாா்’ எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து தமிழக, கா்நாடக முதல்வா்களின் வேண்டுகோளின்படி நானும், நக்கீரன் கோபால், கொளத்தூா் மணி, பேராசிரியா் கல்யாணி, சுகுமாா் ஆகியோரும் காட்டுக்குச் சென்று 5 நாள்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, ராஜ்குமாா் மற்றும் அவரது மருமகன் கோவிந்தராஜை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். அன்று மனிதநேயத்துடன் செயல்படாமல் இருந்திருந்தால் இரு மாநிலங்களிலும் இனக்கலவரங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஆனால், அப்பாவித் தமிழா்கள் மூவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறைக்கும் வகையில் சிவகுமாா் பேசுவது வேதனை அளிக்கிறது. அண்ணல் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்தானா என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது.
எனவே, 3 தமிழா்களின் படுகொலைக்குக் காரணமானவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும், கா்நாடகத்தில் வாழும் தமிழா்களுக்கு எதிா்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் பாதுகாக்கவும், இந்தப் பிரச்னையை தேசிய மனித உரிமை ஆணையம் அல்லது உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.