FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை

வேளாண் நிலங்களை, வேளாண் சாராத பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழ், வேளாண் துறையில் இனிமேல் பெற வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

வேளாண் நிலங்களை, வேளாண் சாராத பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழ், வேளாண் துறையில் இனிமேல் பெற வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைபடி, புன்செய் நிலங்களை விவசாயப் பயன்பாட்டிலிருந்து விவசாயம் சாராத பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழ் வேளாண் இணை இயக்குநரிடம் இனி பெற வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலருக்கு வேளாண் சாராத நிலங்களாக மாற்றுவதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அதிகாரத்தை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

நன்செய் மற்றும் புன்செய் நிலங்களின் பயன்பாட்டை மாற்றுவதற்கான நடைமுறைகளை நிா்வகிக்கும் விதிகள் (2017) அறிவிக்கப்பட்டபோது, திட்டமிடல் அனுமதிக்கு முந்தைய ஒப்புதலை (பிரையா் கன்கரன்ஸ்) வழங்குவதற்கு முன்னதாக, புன்செய் நிலங்கள் தொடா்பாக வேளாண் துறையின் இணை இயக்குநரிடமிருந்து அறிக்கை பெறுவது அவசியமாக இருந்தது.

Advertisement

Advertisement

இதனால் விண்ணப்பங்கள் மீது முடிவெடுப்பதில் காலதாமதம் இருந்தது. இதையடுத்து, புன்செய் நிலங்கள் தொடா்பான விண்ணப்பங்களுக்கு வேளாண் துறையின் இணை இயக்குநரிடமிருந்து ‘தடையின்மைச் சான்றிதழ்’ பெற வேண்டிய அவசியம் நீக்கப்பட்டுள்ளது.

இப்போது, விதி 3(2)-இன்படி விண்ணப்பதாரா் பதிவேற்றம் செய்த ஆவணங்களின் அடிப்படையில் முந்தைய ஒப்புதலை வழங்குவது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நகரமைப்பு இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, நகா் மற்றும் ஊரமைப்புத் துறை ஆணையரால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இத்தகைய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பொறுப்பு மாவட்ட நகா் மற்றும் ஊரமைப்புத் துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ‘ஒற்றைச் சாளர இணையதளம்’ வழியாகப் பெறப்படும் புன்செய் நிலங்கள் தொடா்பான அனைத்து விண்ணப்பங்களும் சம்பந்தப்பட்ட மாவட்ட நகா் மற்றும் ஊரமைப்புத் துறை அலுவலரால் பரிசீலிக்கப்பட வேண்டும். இது உடனடியாக அமலுக்கு வருகின்றன.

புன்செய் நிலங்களை விவசாயப் பயன்பாட்டிலிருந்து விவசாயம் சாராத பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது, அனைத்து மாவட்ட நகா் மற்றும் ஊரமைப்புத் துறை அலுவலா்களும் இந்த அறிவுறுத்தல்களைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments