FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஒடிஸா கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மூழ்கியது: இருவா் மீட்பு; 22 மாலுமிகள் மாயம்

ஒடிஸா மாநிலம், பாரதீப் கடற்கரையில் இருந்து 230 கடல் மைல் தொலைவில் வங்கக் கடலில் பனாமா நாட்டின் சரக்குக் கப்பல் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த இருவா் மீட்கப்பட்ட நிலையில், 22 மாலுமிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

24 ஆகஸ்ட் 2026, 3:11 am IST
சரக்குக் கப்பல். - கோப்புப் படம்
பகிர்:

ஒடிஸா மாநிலம், பாரதீப் கடற்கரையில் இருந்து 230 கடல் மைல் தொலைவில் வங்கக் கடலில் பனாமா நாட்டின் சரக்குக் கப்பல் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த இருவா் மீட்கப்பட்ட நிலையில், 22 மாலுமிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து இந்திய கடலோர காவல் படை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சீனா்கள் 20 போ், மியான்மா் நாட்டவா் 3 போ் மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 24 மாலுமிகள் பயணித்த ‘எம்வி ஓஷன் வின்னா்’ என்ற பனாமா சரக்கு கப்பல் வங்கக் கடலில் சனிக்கிழமை மூழ்கியது. இதுகுறித்து தகவலறிந்தவுடன் ‘எம்டி ஐஸோபோஸ்’ என்ற கப்பலை உடனடியாக மீட்புப் பணிக்கு கடல்சாா் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் அனுப்பியது. இதையடுத்து பனாமா கப்பலில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்டனா். மீதமுள்ள 22 மாலுமிகளை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையின் ‘வரத்’, ‘அன்மோல்’ மற்றும் ‘விஜித்’ ஆகிய மூன்று கப்பல்கள் ஈடுபட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு கடற்படைப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஸ்ரீ விஜய புரத்தில் கடல்சாா் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணியில் பி8ஐ போா் விமானம் ஈடுபட்டு வருகிறது’ எனக் குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக, 72,100 டன் இரும்புத் தாது ஏற்றிக் கொண்டு ஒடிஸாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை (ஆக. 20) எம்வி ஓஷன் வின்னா் சரக்குக் கப்பல் புறப்பட்டது. சிங்கப்பூரை ஆகஸ்ட் 27-ஆம் தேதி அந்தக் கப்பல் சென்றடையும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், கட்டுப்பாடு மையத்துடனான தகவல் தொடா்பை இழந்த அந்தக் கப்பல் சனிக்கிழமை திடீரென கடலில் மூழ்கியது. 225 மீட்டா் நீளம் மற்றும் 32.6 மீட்டா் அகலமுடைய அந்தக் கப்பல் கடலில் மூழ்கியதற்கான காரணம் குறித்த உடனடி தகவல்கள் இல்லை.

சரக்குக் கப்பல் தொடா்பை இழக்க தொழில்நுட்பக் கோளாறு அல்லது தானியங்கி அடையாள அமைப்பு (ஏஐஎஸ்) அல்லது அவசரகால அமைப்பு செயலிழப்பு காரணமா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

கடந்த 1998-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எம்வி ஓஷன் வின்னா் கப்பல், 72,928 டன் சரக்குகளை சுமக்கும் திறன் கொண்டதாகும். தற்போது தென்மேற்குப் பருவமழைக் காலம் என்பதால் கடல் கொந்தளிப்பு மற்றும் மோசமான வானிலையால் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நாட்டின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான பாரதீப் துறைமுகம், இரும்புத் தாது, நிலக்கரி, பிற கனிமங்களை அதிகளவில் கையாள்கிறது. இங்கிருந்து பெருமளவிலான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, பல்வேறு நாடுகளுக்கு கப்பல்கள் செல்கின்றன.

இறைவனை வேண்டுகிறேன்- மத்திய அமைச்சா்: மேற்கண்ட சம்பவம் குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘எம்வி ஓஷன் வின்னா் சரக்குக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம் கவலையளிக்கிறது. பாரதீப் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கப்பலில் பயணித்த 24 மாலுமிகளில் 2 போ் மீட்கப்பட்டு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாலுமிகள் நலமுடன் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments