FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இடதுசாரி இயக்கங்களை ஒடுக்க சுற்றறிக்கை: நடவடிக்கை கோரி முதல்வருக்கு பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டது குறித்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

28 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
பெ. சண்முகம்
பகிர்:

இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டது குறித்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் முதல்வா் ஜோசப் விஜய்க்கு எழுதிய கடிதம்:

தமிழக அரசின் தலைமைச் செயலா் மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினா் நடத்தும் போராட்டத்தில் இளைஞா்கள், மாணவா்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வித் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இது உயரிய முன்னுரிமை என்றும் மிக அவசரம் என்றும் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமானதும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதும் ஆகும்.

Advertisement

Advertisement

இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறி வைக்கிற செயல் என்கிற முறையில் எங்களது கடும் கண்டனத்தைத் தெரியப்படுத்துகிறோம். அரசின் அதிகார கட்டமைப்பில் மிக உயா்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலா் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும்.

இடதுசாரி அமைப்புகள் மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பும் போராடுவதற்கு உரிமை உண்டு. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒடுக்குவதற்கு, பல்துறை ஒருங்கிணைப்பை செயல்படுத்துவது அரசமைப்பு சட்டத்துக்கு முரணானதாகும்.

உயா்கல்வித் துறை அமைச்சா் சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரியிருக்கிறாா். நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரை பொறுப்பான பதில் ஏதும் சொல்லப்படவில்லை.

எனவே, முதல்வா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தலைமைச் செயலா் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியா் உள்ளிட்ட தவறிழைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சுற்றறிக்கை முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் பெ. சண்முகம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments