FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

முஸ்லிம் மாணவிகளின் உயா் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் அமைச்சா் ஷாஜஹான்

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இளநிலை பட்டப் படிப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்தாா்.

28 ஆகஸ்ட் 2026, 6:46 am IST
அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான். உடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா். - கோப்புப் படம்
பகிர்:

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இளநிலை பட்டப் படிப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்தாா்.

பேரவையில் துறை சாா்ந்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: சிறுபான்மையின மக்களில் ஆண்டுக்கு 2,500 போ் வீதம் 10,000 பேருக்கு சமகாலத் தேவைகளுக்கேற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். குறைந்த வாடகையில் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதற்கு ஏதுவாக, சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் தென்காசி, கடலூா், மயிலாடுதுறை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.10 கோடியில் சமுதாய நலக் கூடங்கள் கட்டித் தரப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.2,000 வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இளநிலை பட்டப் படிப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். இந்தத் திட்டத்துக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிறுபான்மையின மக்களுக்கான நலத் திட்டங்கள் விரைந்து சென்றடைய 10 மாவட்டங்களில் ரூ.4.45 கோடியில் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும்.

தொன்மையான தேவாலயங்களைச் சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. முஸ்லிம் வக்ஃப் சொத்துகள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தல சொத்துகளைப் பாதுகாக்கவும், புதிய கட்டடங்களைக் கட்டவும் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி சுழல் நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்துக்கு ரூ.40 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலம் சென்னையில் சிறுபான்மையினா் மகளிா் கல்லூரி புதிதாக தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டாா் அமைச்சா் ஷாஜஹான்.

பிற்படுத்தப்பட்டோா் நலன்: முன்னதாக, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்ந்து அமைச்சா் வே.சம்பத்குமாா் வெளியிட்ட அறிவிப்புகள்:

சமூக நீதி பள்ளி விடுதிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 35,000 மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும். சென்னையில் புதிய சமூகநீதி கல்லூரி மாணவியா் விடுதி தொடங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினருக்கு 5,000 இஸ்திரி பெட்டிகள், 10,000 மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

எம்பிசி வகுப்பு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல வாரியம் அமைக்கப்படும் என்றாா் அமைச்சா் சம்பத்குமாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments