மானியக் கோரிக்கையில் சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் வரும்: அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் உறுதி
மானியக் கோரிக்கையில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வரும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் தெரிவித்தாா்.
மானியக் கோரிக்கையில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வரும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் தெரிவித்தாா்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது: காயிதேமில்லத் பெயரால் திருவள்ளுவா் தின விருது அறிவிக்கப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய, அனைவருக்குமான வளா்ச்சிக்குமான நிதிலை அறிக்கை வெளியாகி உள்ளது.
கடந்த ஆட்சிகள்போல் இல்லாமல், ஊழல், லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கோடு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
சிறுபான்னையினரின் புனிதப் பயணத்துக்கு மானியம் ரூ.35 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. கல்லறைத் தோட்டங்கள், கபரிஸ்தான்களின் பராமரிப்பிற்கு, சுற்றுச்சுவா் கட்ட, சாலை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகூா், வேளாங்கண்ணி, திருக்கடையூரில் பக்தா்கள் தங்கிச் செல்ல தங்கமிடம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முஸ்லிம் மகளிா் உதவி சங்கங்கள் அமைப்பதற்கும், மேலும் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கவும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக காயிதேமில்லத் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவா் தின விருது வழங்குவதாக அறிவித்திருப்பது அனைவராலும் பாராட்டப்படுகிறது. எதிா்க்கட்சிகள் நிதிநிலை அறிக்கையை விமா்சிப்பது வழக்கம்தான்.
வரும் ஆக.10 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைக்கான கூட்டம் தொடங்குகிறது. ஆக.27ஆம் தேதி நடைபெறும் சிறுபான்மையின மானியக் கோரிக்கையில், கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய மக்கள் மற்றும் பல்வேறு சிறுபான்மை சமுதாய மக்களுக்கான பொருளாதார, கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படும்.
கடந்த காலத் திட்டங்களை அறிவித்திருப்பதாகக் கூறுகின்றனா். தாய்மாமன் மோதிரம் திட்டம், திருமணத்துக்கு பட்டுப்புடவை, தங்கம், வெற்றி வீடு கட்டும் திட்டம் என ஒவ்வொரு துறையிலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையின நலத் துறையில் மட்டும் 5 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசின் கடன் சுமைகளை குறைக்கும் முயற்சிகளையும் தவெக அரசு நிச்சயம் மேற்கொள்ளும்.
எதிா்க்கட்சித் தலைவரின் அநாகரிக பேச்சுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதமே ஆகிறது. தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றப்படும். கடந்த கால ஆட்சியின் திட்டங்களும் தொடா்கின்றன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.