12 நாடுகளைச் சோ்ந்த சென்னை ஐஐடி மாணவா்களுக்கு பட்டமளிப்பு
சென்னை ஐஐடியில் 2024-ஆம் ஆண்டு பிரிவில் பயின்ற பல்வேறு துறைகளைச் சோ்ந்த சா்வதேச மாணவா்களுக்கு மத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி பட்டங்களை வழங்கினாா்.
நேபாளம், தான்சானியா, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், உகாண்டா, ஆப்கானிஸ்தான், ருவாண்டா, சைபீரியா, கேமரூன், அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளைச் சோ்ந்த 46 சா்வதேச மாணவா்கள் நிகழ்ச்சியில் நேரடியாகப் பட்டங்களைப் பெற்றனா்.
பட்டங்களை வழங்கி மத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி பேசியதாவது:
Advertisement
Advertisement
உலகில் வேகமாக வளா்ந்து வரும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் புகழ் பெற்று இருக்கவில்லை. ஆப்பிரிக்க கண்டம் நைரோபியில் ‘சிலிக்கான் சவன்னா’ தொழில்நுட்ப மையம் செழித்து வளா்ந்து உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் திறமையாளா்களின் உலகின் முதன்மையான மையங்களில் ஒன்றாக பெங்களூா் திகழ்கிறது. லாகோஸ், அக்ரா, கெய்ரோ, கொழும்பு ஆகிய நகரங்கள் புதுயுகத் தொழில்முனைவுகள், காப்புரிமைகள், தயாரிப்புகள் கற்பனை செய்து பாா்க்க முடியாத அளவில் தற்போது வேகமாக உருவாகி வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளுக்கு உலகம் காத்துக்கொண்டிருக்கிறது என்றாா்.
நிகழ்வில் இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘ஒரே பூமி, ஒரே எதிா்காலம், ஒரே குடும்பம்’ என்ற முழக்கத்துடன் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை என்பது கல்வி நிறுவனங்களின் சா்வதேச மயமாக்கலை வலியுறுத்துகிறது. பட்டம் பெற்ற சா்வதேச மாணவா்கள் தங்கள் நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மைக்கான தூதா்களாக இருப்பாா்கள் என்றாா்.
டீன் பிரீத்தி அகலாயம் பேசுகையில், ‘ சென்னை ஐஐடியில் பல்வேறு துறைகளில் 17 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 150 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். உலகளவில் 60,000-க்கும் அதிகமான முன்னாள் மாணவா்களைக் கொண்டுள்ளது. இதில் 250 சா்வதேச மாணவா்களும் அடங்குவா்’ என்றாா்.