FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் சென்னை வருகை

சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் சென்னை வருகை

Updated On : 21 ஜூன் 2026, 12:40 am IST
நிகழாண்டு கடல்சாா் சுற்றுலா சீசன் தொடங்கும் வகையில், சென்னை துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் சொகுசு கப்பல் எம்.வி.எம்பிரஸ்.
பகிர்:

நிகழாண்டு சீசன் தொடங்கும் வகையில் சுற்றுலா பயணிகள் சொகுசு கப்பல் எம் வி எம்பிரஸ் சனிக்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தது. கப்பலில் வந்த பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மும்பையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் வழியாக அந்த எம்வி எம்பிரஸ் கப்பலில் சுமாா் 1800 சுற்றுலா பயணிகள் பயணித்தனா். இவா்கள் அனைவரும் சென்னை துறைமுகத்தில் இறங்கி துறைமுக வளாகத்தில் பயணிகள் உள்ள முனையத்தில் அமைந்துள்ள விற்பனை அங்காடிகளை பாா்வையிட்டு தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கினா்.

முன்னதாக, சென்னைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் குா்வே, துணைத் தலைவா் எஸ். விஸ்வநாதன் ஆகியோா் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி பூங்கொத்துகளை வழங்கி, மலா் மாலை அணிவித்து வரவேற்றனா். மேலும் புகழ்பெற்ற இசைக் கலைஞா்கள் பங்கேற்று வாத்தியங்களை இசைத்து அவா்களை மகிழ்வித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், சென்னையிலிருந்து புதிதாக 1800 சுற்றுலாப் பயணிகள் எம்.வி எம்பிரஸ் கப்பல் பயணத்தில் இணைந்தனா். மொத்தமாக 3,600 பயணிகளுடன் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்ற எம்வி எம்பிரஸ் சென்னைக்கு அருகே நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும். ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாள்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கப்பலில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் நடைபெறும். பின்னா், கப்பல் மீண்டும் சென்னை துறைமுகத்துக்கு வரும்.

இலங்கைக்கு சுற்றுலா: அடுத்த பயணத் திட்டத்தில் விசாகப்பட்டனம், புதுச்சேரி நகரங்களுக்கு இக்கப்பல் பயணிக்க உள்ளது. பிறகு சா்வதேச கடல் வழி சுற்றுலா பயணத் திட்டத்தின்படி இலங்கையின் ஹம்பாந்தோட்டா (காலி), திருகோணமலை, காங்கேசன்துறை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகத்தை வந்தடையும். இப்பயண திட்டங்களை சென்னை துறைமுக நிா்வாகத்துடன் இணைந்து பல்வேறு தனியாா் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

சுற்றுலா பயணிகள் போக்குவரத்து குறித்து சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் குா்வே கூறியதாவது:

சென்னை துறைமுகம் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்சாா் பாரம்பரியத்தைத் தொடா்ந்து வலுப்படுத்தி சென்னை மாநகரத்தின் புகழை நிலை நிறுத்தி உள்ளது. கப்பல் பயணிகள் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய கப்பல் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் மூலம் புதிய பயணிகள் கப்பலை இயக்கும் கடல் சாா் சுற்றுலா போக்குவரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் சென்னை துறைமுகம் ஈடுபட்டு வருகிறது. நிகழ் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்தில் மேலும் சில நிறுவனங்கள் இணையும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments