கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்!
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடங்கியது குறித்து...
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தொடங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்க் கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
தமிழக அரசின் சார்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில், கொல்லிமலை செம்மேடு வல்வில்ஓரி அரங்கில், வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும், வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி தொடக்க விழாவும் இன்று நடைபெற்றது.
Advertisement
Advertisement
காலை 10.30 மணியளவில் மலர்க் கண்காட்சியை, சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பொன். சந்திரசேகர் தொடக்கி வைத்தார். நாமக்கல் கோட்டாட்சியர் வே. சாந்தி முன்னிலை வகித்தார். அதன்பிறகு, வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற சுற்றுலா விழாவில், பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த 22 அரங்குகளை சட்டப்பேரவை உறுப்பினர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, வல்வில்ஓரியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கொல்லிமலை பழங்குடியின மக்களின் சேர்வை ஆட்டம் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
50,000 மலர்களைக் கொண்டு உருவங்கள் கண்காட்சி:
கொல்லிமலை தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில், மலர்க் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி நடைபெற்றது. இதனையொட்டி, 50,000 ரோஜாக்களால் வண்ணத்துப்பூச்சி, மங்கையர், மீன், இதயம், முயல் உள்ளிட்டவை பல்வேறு வகை மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள், பெரியவர்களை கவரும் வண்ணம் காய்கறிகளில் கழுகு வடிவிலும், டிராகன் வடிவிலும், பாகற்காய் கொண்டு முதலை உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில், ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம் சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலர்கள் இடம் பெற்றுள்ளன.
மருத்துவப்பயிர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர், பயன்படும் பகுதி, மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சுற்றுலா பல்லுயிர் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், பறவைகள், ஆடு, மாடுகள், நாய் வகைகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்விழாவில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆகாய கங்கை அருவி செல்ல தடை:
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கொல்லிமலை ஆகாய கங்கை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அறப்பளீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவதால், கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை அருவி சென்று குளித்து வருவர். விழாக்காலம் என்பதால் கூட்ட நெரிசல், அசம்பாவிதம் தவிர்க்க ஞாயிறு, திங்கள்கிழமைகளில் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொல்லிமலை வனத்துறையினர் தெரிவித்தனர்.
The Valvil Ori Festival and flower show began in Kolli Hills on Sunday (August 2).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.