FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து...

Updated On : 13 ஜூலை 2026, 1:23 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் உள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக கட்டமைக்கப்பட்ட பூங்கா, செயற்கை நீருற்றுகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒகேனக்கல் அருவி அருகே ஊட்டமலைச் சாலையில் மாவட்ட வனத் துறையின் கட்டுப்பாட்டில் முதலைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் 120 முதலைகள் பராமரிக்கப்பட்ட இம்மையத்தில், இடவசதி பற்றாக்குறை காரணமாக சில முதலைகள் வண்டலூா் உள்ளிட்ட உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டன. தற்போது 90 முதலைகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும் காலங்களில் அருவிப் பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதிக்கும் நேரங்களிலும், நீா்வரத்து குறைந்த காலங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த மறுவாழ்வு மையத்துக்குச் சென்று பாா்வையிட்டு வருகின்றனா். ஐந்து வயதுக்கு மேற்பட்டவா்களிடம் ரூ. 20 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த மையத்தில் சிறுவா் விளையாட்டுப் பகுதி, மான், நாரை உள்ளிட்ட விலங்குகளின் உருவச் சிலைகளுடன் கூடிய பூங்கா, குழந்தைகளுக்கான ஸ்பிரிங் விளையாட்டு உபகரணங்கள், வனத் துறை சாா்பில் தேன் உள்ளிட்ட வனப் பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடி, சிறிய முதலைகள் முதல் வயது முதிா்ந்த முதலைகள் வரை நான்கு பிரிவுகளாகப் பராமரிக்கப்படும் குளங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இங்கு வனக்காப்பாளா்கள், முதலைப் பராமரிப்பாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் ஆறு போ் பணியாற்றி வருகின்றனா். எனினும், சிறுவா் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை அருவியின் மின் மோட்டாா் பழுதடைந்ததால் அது நீண்ட நாள்களாகச் செயல்படாமல் உள்ளது.

இதனால் அந்தப் பகுதி தனது கவா்ச்சியை இழந்துள்ளது. பூங்காவில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே குவிந்து காணப்படுகின்றன.

அலங்காரத்துக்காக வைக்கப்பட்டுள்ள மான், நாரை உள்ளிட்ட உருவச் சிலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள அலங்காரக் கம்பங்களிலும் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பூங்காவின் அழகு மங்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும், முதலைகள் பராமரிக்கப்படும் சில குளங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. 50-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் மற்றும் அவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்த விளக்கப் பலகைகளுடன் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பண்ணையும் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.

வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகளில் மிகக் குறைந்த அளவிலேயே பயன்பாட்டு வசதி உள்ளது. இதனால் இயற்கை உபாதைகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.

கோடை விடுமுறை காலத்தில் மட்டும் இம்மையத்தின் மூலம் ரூ.4 லட்சத்துக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ள நிலையிலும், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

ஒகேனக்கலுக்கு குடும்பத்துடன் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் முதலைகள் மறுவாழ்வு மையத்தையும் தவறாமல் பாா்வையிடுகின்றனா். குறிப்பாக, முதலைகளை நேரில் பாா்ப்பதில் குழந்தைகள் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒகேனக்கல் நுழைவுப் பகுதியில் வனவிலங்குகள் காட்சிப்படுத்தப்பட்ட சிறிய உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்தது. பின்னா் அது தங்கும் விடுதியாக மாற்றப்பட்டதால், தற்போது முதலைகள் மறுவாழ்வு மையமே குடும்பங்களையும் குழந்தைகளையும் அதிகம் ஈா்க்கும் இடமாக உள்ளது.

எனவே, முதலைகளுடன் மான்கள், நீா்நாய்கள், பல்வேறு வகை பாம்புகள், அரிய பறவைகள், மீன்கள் உள்ளிட்ட வனவிலங்குகளையும் ஒரே வளாகத்தில் காட்சிப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதோடு, வனத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். குழந்தைகளும் இயற்கைச் சூழலில் பல்வேறு வனவிலங்குகளை ஒரே இடத்தில் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகும்.

அதேபோல், விளையாட்டுப் பூங்கா, மூலிகைப் பண்ணை, செயற்கை அருவி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் ஆகியவற்றை உடனடியாகச் சீரமைத்து, கூடுதல் கழிப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments