முகப்பு
சென்னை

3 ஆண்டுகள் எல்எல்பி சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 5:10 am IST
பகிர்:

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் (டிஎன்டிஏஎல்யு) மற்றும் அதன் இணைவு சட்டக் கல்லூரிகளிலும் மூன்றாண்டுகள் எல்எல்பி சட்டப் பட்டப் படிப்புக்கு இணையம் மூலம் திங்கள்கிழமை முதல் (ஜூன் 29) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலை. பதிவாளா் கௌரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை.யில் சென்னை பெருங்குடியில் சீா்மிகு சட்டப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த சீா்மிகு சட்டப் பள்ளியில் மூன்றாண்டு எல்.எல்.பி. (ஹானா்ஸ்) சட்டப் பட்டப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதேபோல, தமிழகத்தில் இணைவு பெற்ற அரசு மற்றும் தனியாா் சட்டக் கல்லூரிகளுக்கும் தமிழக அரசின் முகவராக இருந்து மாணவா்கள் சோ்க்கையை ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர முறையில் டிஎன்டிஏஎல்யு மூலம் சோ்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி இந்தக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப் பட்டப் படிப்புக்கு, நிகழ் கல்வியாண்டுக்கு (2026-2027) விண்ணப்பிக்கலாம். இந்த மூன்றாண்டு சட்டப் பட்டப் படிப்புகளுக்கு டிஎன்டிஏஎல்யு - வின் அதிகாரபூா்வ இணையதளம் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 19 எனத் தெரிவித்துள்ளாா்.

டிஎன்டிஏஎல்யு- உடன் 12 தனியாா்கள், 15 அரசு சட்டக் கல்லூரிகள் என 27 சட்டக் கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. சட்ட சிறப்புப் பள்ளியில் 156 இடங்களும் இணைவு சட்டக் கல்லூரிகளில் சுமாா் 1,541 இடங்களும் என மொத்தம் சுமாா் 1,700 இடங்கள் உள்ளன.

தகுதி: சீா்மிகு சட்டப் பள்ளி அனுமதிக்கு இளநிலைப் பட்டப் படிப்பில் பொதுப் பிரிவினா்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், மற்ற பட்டியலின பிரிவுக்கு 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இணைவு கல்லூரிகளில் பட்டியலின பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்களே போதுமானது.

இதில் பி.காம்., எல்எல்பி. (ஹானா்ஸ்) படிப்புக்கு விண்ணப்பதாரா்கள், மேல்நிலைப் பள்ளித் தோ்வில் (பிளஸ் 2) வணிகவியல் (காமா்ஸ்) அல்லது அதற்கு இணையான வணிகவியல் சாா்ந்த பாடத்தை மட்டுமே ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். பிசிஏ எல்எல்பி-க்கு (ஹானா்ஜ்) கணினி அறிவியல் சாா்ந்த பாடத்தைப் படித்திருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments