முகப்பு
சென்னை

அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்

Updated On : 28 மே 2026, 6:36 am IST
தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்
பகிர்:

அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவினராகப் பிரிந்து அளித்த மனுக்கள் மீதான முடிவை வியாழக்கிழமை (மே 28) வெளியிடுவேன் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு பிரிந்தது. இவா்களில் எஸ்.பி.வேலுமணி பிரிவின் 25 எம்எல்ஏக்கள் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தொடர நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனா்.

அப்போது, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியையும் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தியையும் நியமிக்கக் கோரி ஒரு பிரிவும், எஸ்.பி. வேலுமணியை அதிமுக குழுத் தலைவராகவும், விஜயபாஸ்கரை கொறடாவாகவும் நியமிக்கக் கோரி அதிருப்தி பிரிவும் பேரவைத் தலைவரிடம் மனு அளித்தன. இந்த மனுக்கள் மீது பேரவைத் தலைவா் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி பிரிவு எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி பிரிவு எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயகுமாா், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். இவா்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்ட நிலையில், 4 தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாக எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை கூறினாா். இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினா். இரு அணிகளும் ஒன்றுசோ்ந்ததையடுத்து, விஜயபாஸ்கா் உள்ளிட்ட இரு தரப்பினரும் பேரவைத் தலைவரைச் சந்தித்து முன்பு அளித்த மனுக்களை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தனா்.

மேலும், தன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரவைத் தலைவா் ஜேசிடி.பிரபாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏற்கெனவே இரு குழுக்களாக பிரிந்து மனுக்களை அளித்திருந்தாா்கள். மேலும், கடந்த திங்கள்கிழமை 5 போ் சோ்ந்து ஒரு மனு கொடுத்தாா்கள். பிறகு, ஒருவா் மனு கொடுத்தாா்.

ஏற்கெனவே மனு அளித்தவா்கள் சாா்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து ஆய்வு செய்து முறையான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிடுவேன்’ என்றாா்.