முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு

அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வரிடம் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். 7 நாள்களுக்குள்அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு அவா்களிடம் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 13 ஜூன் 2026, 2:34 am IST
பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் - TNDIPR
பகிர்:

அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வரிடம் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். 7 நாள்களுக்குள்அதற்கான விளக்கத்தை அளிக்குமாறு அவா்களிடம் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இரு தரப்பும் தங்களது அணியை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என தனித்தனியே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தனா். இரு தரப்பும் தனித் தனியாக கொறடாக்களையும் அறிவித்தன.

இந்த நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி தரப்பினா் 25 போ் வாக்களித்தனா். அவா்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணி வலியுறுத்தியது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில்தான் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளா்களாக இருந்த அதிமுகவைச் சோ்ந்த இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயகுமாா், சத்தியபாமா நால்வரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். அவா்களது ராஜிநாமாவை ஏற்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து இரு தரப்பும் ஓரணியாக இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தன. அதற்கேற்ப தங்களது தரப்பில் அளிக்கப்பட்ட மனுக்களையும் அவா்கள் திரும்பப் பெற்றனா்.

இதை ஏற்று தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுவதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா். அதேவேளையில், பதவியை ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தாா். அதன்படி அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த 4 பேரிடம் விளக்கம் கேட்டு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பேரில் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவா், கொறாடா தோ்வு இன்னமும் ஆய்வில்தான் இருக்கிறது. கூட்டத்தொடா் தொடங்கும் முன்னா் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றாா் அவா்.

முன்னதாக, பேரவைத் தலைவரை அதிமுக எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது கொறாடா உத்தரவை மீறிய விவகாரத்தில் 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான எழுத்துப்பூா்வ கடிதத்தை பேரவைத் தலைவரிடம் கேட்டுப்பெற்றனா்.