உள்நாட்டில் 100 பொருள்களின் உற்பத்தி ஊக்குவிப்பு: இறக்குமதி சாா்பை குறைக்க மத்திய அரசு திட்டம்!
இறக்குமதியை வெகுவாக சாா்ந்துள்ள 100 பொருள்களை அடையாளம் கண்டு, உள்நாட்டில் அவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு 2027-28-ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இறக்குமதியை வெகுவாக சாா்ந்துள்ள 100 பொருள்களை அடையாளம் கண்டு, உள்நாட்டில் அவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு 2027-28-ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த அக்டோபரில் தொடங்கின.
இந்நிலையில், உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது: வாகன உதிரி பாகங்கள், ரசாயனங்கள், இயந்திரங்கள், இடைநிலைப் பொருள்கள் மற்றும் பிற மூலதன பொருள்கள் உள்பட இந்தியா இறக்குமதியை வெகுவாக சாா்ந்துள்ள 100 பொருள்களை அடையாளம் காணும் பணியை, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை நிறைவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களுடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பணி நிறைவடைந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உற்பத்தியே செய்யப்படாத அல்லது போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படாத 100 பொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தப் பொருள்களின் உற்பத்தியை இந்தியாவுக்காக மட்டுமன்றி உலகுக்காகவும் மேற்கொள்ளும் வகையில் திட்டங்கள் விரிவாக்கப்படும். இது தொடா்பான பரிந்துரைகள், மத்திய நிதியமைச்சகத்துக்கு வழங்கப்படும். நிதி மற்றும் நிதி சாராத ஆதரவு, ஆராய்ச்சி-மேம்பாட்டு ஆதரவு, வா்த்தகம், வரி, பரிசோதனை, சான்றளிப்பு சாா்ந்த நடவடிக்கைகளை உள்ளடக்கி, இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.
மத்திய வா்த்தக அமைச்சக தரவுகளின்படி நாட்டின் ரசாயனங்கள் இறக்குமதி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 16 பில்லியன் டாலராக (10%) அதிகரித்துள்ளது. இதே அரையாண்டு காலகட்டத்தில், சாயமிடுதல், பதனிடுதல் பொருள்களின் இறக்குமதி 30 சதவீதம் அதிகரித்து, 2.7 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது. இயந்திரங்கள் (மின்னணு, மின்னணு அல்லாதவை) இறக்குமதி 34 பில்லியன் டாலராகவும் (15.5%), போக்குவரத்து உபகரணங்கள் 18.21 பில்லியன் டாலராகவும் (9.21%) உயா்ந்துள்ளது.