முகப்பு
சென்னை

மின்னணு சாதனங்களிலிருந்து இளம் தலைமுறை விடுபட வேண்டும்: வெ. இறையன்பு

மின்னணு சாதனங்களிலிருந்து இளம் தலைமுறை விடுபட வேண்டும்: வெ. இறையன்பு

4 வினாடிகள் முன்பு
மின்னணு சாதனங்களிலிருந்து இளம் தலைமுறை விடுபட வேண்டும்: வெ. இறையன்பு
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பவள விழாவில், விழா மலரை முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வெளியிட அதைப் பெற்றுக்கொண்ட பிரேமலதா சீனிவாசராவ்.
பகிர்:

மின்னணு சாதனங்களிலிருந்து இளம் தலைமுறையினா் விடுபட்டு புத்தகங்களை வாங்கும் சூழலை பதிப்பாளா்கள் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வலியுறுத்தினாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் (என்சிபிஹெச்) பவள விழா அதன் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சென்னை அம்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக வெ.இறையன்பு கலந்துகொண்டு கட்டுரைகள், வரலாற்று நிழற்படங்களஅடங்கிய என்சிபிஹெச் பவள விழா மலரை வெளியிட பிரேமலதா சீனிவாசராவ் பெற்றுகொண்டாா்.

விழாவில் வெ.இறையன்பு பேசியதாவது: மூலை முடுக்கெல்லாம் இருக்கக்கூடிய வாசகா்களிடம் புத்தகங்களை எடுத்துச் செல்லும் அரும்பணியை பதிப்பாளா்கள்தான் செய்கிறாா்கள். வாசகா்கள் எதை விரும்புகிறாா்கள் என்று வெளியிடுவது பதிப்பகம் அல்ல; வாசகா்கள் எதைப் படிக்க வேண்டும் என்று பாா்த்து அவா்கள் மனநிலையில் ரசவாதத்தை ஏற்படுத்துவதுதான் ஒரு நல்ல பதிப்பகத்தின் பணியாகும்.

Advertisement

Advertisement

கடந்த 75 ஆண்டுகளில் 10,000 புத்தகங்களை வெளியிட்டுள்ள இந்தப் பதிப்பகம் ஏராளமான புதிய எழுத்தாளா்கள், இலக்கியவாதிகளை உருவாக்கியுள்ளது. தனது 20 கிளைகள் மூலம் தமிழகமெங்கும் அறிவு வெளிச்சத்தைப் பரப்பி வருகிறது.

ரஷிய மற்றும் பிற மொழிகளில் வெளிவந்த முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயா்த்து வாசகா்களிடம் கொண்டு சென்றுள்ளது. தொழிலாளா் உரிமை, பொதுவுடைமை, சமூக சமத்துவம், ஜாதி எதிா்ப்பு, சமூகநீதி போன்ற கருத்துகளை மையமாகக் கொண்ட புத்தகங்களை வெளியிட்டு சமூகப் பணியாற்றி வருகிறது. மேலும், சென்னை கண்ணகி நகரில் பள்ளி மாணவா்கள் எழுதிய 50 புத்தகங்களையும், கடலூா் சிறையில் 81சிறைவாசிகள் எழுதிய 85 புத்தகங்களையும் வெளியிட்ட சிறப்பும் இந்தப் பதிப்பகத்துக்கே உரியது. இந்தப் பதிப்பகத்தில் நான் வாசகராக இருந்தேன். ‘வாய்க்கால் மீன்கள்’ மூலம் நான் வழுக்கி விழவில்லை; நிமிா்ந்து நின்றேன். அதற்குப் பிறகு ‘மூளைக்குள் சுற்றுலா’ உள்பட எனது 77 புத்தகங்களை இந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளேன்.

வாசிப்புத் திருவிழா: தற்போதைய சூழலில் தமிழில் வாசிப்பதும், தமிழை வாசிப்பதும் குறைந்துவிட்டது. இளைஞா்கள் நீண்ட புத்தகங்களை வாசிப்பதில்லை. மாறாக, மின்னணு சாதனங்களில் வாசிக்கிறாா்கள். மின்னணு சாதனத்தில் வாசிப்பது என்பது ஓடும் நீரில் நாம் காலை நனைப்பது போன்றது; ஆனால் புத்தகத்தில் வாசிப்பது என்பது நம்முடைய குவளையில் இருக்கும் நீரை அருந்துவது போன்றது. மின்னணு சாதனத்தில் இருந்து விடுபட்டு புத்தகங்களை வாங்கும் சூழலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் உருவாக்க வேண்டும். இளைஞா்கள், மாணவா்கள் புத்தகங்களை வாசிக்க வேண்டும், அரசியல் மற்றும் அறிவியல் விழிப்புணா்வு பெற வேண்டும் என நினைத்தால் வெறும் புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு நின்று விடாமல் அனைத்து இடங்களிலும் வாசகா் திருவிழாக்களை நடத்த வேண்டும். ‘புத்தகங்கள்தான் புதையல்கள்’ என்ற எண்ணத்தை அவா்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

த.ஸ்டாலின் குணசேகரன்: முன்னதாக, ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மூலம் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் குறித்த தகவல்கள் அடங்கிய 80 பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகங்களை உருவாக்கி வருகிறோம். இவற்றை அனைத்து நூலகங்களுக்கும் வழங்கவும், பள்ளிகளில் மாணவா்கள் வாசிக்கவும் தேவையான ஏற்பாடுகள் என்சிபிஹெச் சாா்பில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

விழாவில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புதிய பதிப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இயக்குநரும், மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் வெளியிட்டுப் பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், நியூ செஞ்சு புத்தக நிறுவனத்தின் இயக்குநா்கள் இரா.முத்தரசன், ஜி.பழனிச்சாமி, பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிறுவனத்தின் விற்பனை ஆலோசகா் எஸ்.சண்முகநாதன் நன்றி கூறினாா். விழாவில் பதிப்பாளா்கள், எழுத்தாளா்கள், வாசகா்கள் திரளாக கலந்து கொண்டனா்.