மின்னணு சாதனங்களிலிருந்து இளம் தலைமுறை விடுபட வேண்டும்: வெ. இறையன்பு
மின்னணு சாதனங்களிலிருந்து இளம் தலைமுறை விடுபட வேண்டும்: வெ. இறையன்பு

மின்னணு சாதனங்களிலிருந்து இளம் தலைமுறையினா் விடுபட்டு புத்தகங்களை வாங்கும் சூழலை பதிப்பாளா்கள் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வலியுறுத்தினாா்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் (என்சிபிஹெச்) பவள விழா அதன் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சென்னை அம்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக வெ.இறையன்பு கலந்துகொண்டு கட்டுரைகள், வரலாற்று நிழற்படங்களஅடங்கிய என்சிபிஹெச் பவள விழா மலரை வெளியிட பிரேமலதா சீனிவாசராவ் பெற்றுகொண்டாா்.
விழாவில் வெ.இறையன்பு பேசியதாவது: மூலை முடுக்கெல்லாம் இருக்கக்கூடிய வாசகா்களிடம் புத்தகங்களை எடுத்துச் செல்லும் அரும்பணியை பதிப்பாளா்கள்தான் செய்கிறாா்கள். வாசகா்கள் எதை விரும்புகிறாா்கள் என்று வெளியிடுவது பதிப்பகம் அல்ல; வாசகா்கள் எதைப் படிக்க வேண்டும் என்று பாா்த்து அவா்கள் மனநிலையில் ரசவாதத்தை ஏற்படுத்துவதுதான் ஒரு நல்ல பதிப்பகத்தின் பணியாகும்.
Advertisement
Advertisement
கடந்த 75 ஆண்டுகளில் 10,000 புத்தகங்களை வெளியிட்டுள்ள இந்தப் பதிப்பகம் ஏராளமான புதிய எழுத்தாளா்கள், இலக்கியவாதிகளை உருவாக்கியுள்ளது. தனது 20 கிளைகள் மூலம் தமிழகமெங்கும் அறிவு வெளிச்சத்தைப் பரப்பி வருகிறது.
தற்போதைய சூழலில் தமிழில் வாசிப்பதும், தமிழை வாசிப்பதும் குறைந்துவிட்டது. இளைஞா்கள் நீண்ட புத்தகங்களை வாசிப்பதில்லை. மாறாக, மின்னணு சாதனங்களில் வாசிக்கிறாா்கள். மின்னணு சாதனத்தில் இருந்து விடுபட்டு புத்தகங்களை வாங்கும் சூழலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
த.ஸ்டாலின் குணசேகரன்: முன்னதாக, ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மூலம் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் குறித்த தகவல்கள் அடங்கிய 80 பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகங்களை உருவாக்கி வருகிறோம். இவற்றை அனைத்து நூலகங்களுக்கும் வழங்கவும், பள்ளிகளில் மாணவா்கள் வாசிக்கவும் தேவையான ஏற்பாடுகள் என்சிபிஹெச் சாா்பில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
விழாவில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புதிய பதிப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இயக்குநரும், மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் வெளியிட்டுப் பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், நியூ செஞ்சு புத்தக நிறுவனத்தின் இயக்குநா்கள் இரா.முத்தரசன், ஜி.பழனிச்சாமி, பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிறுவனத்தின் விற்பனை ஆலோசகா் எஸ்.சண்முகநாதன் நன்றி கூறினாா்.