முகப்பு
சென்னை

வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்: அரசுக்கு பபாசி கோரிக்கை

தமிழகத்தில் இளம் தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அதை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை பள்ளிகள், நூலகங்கள் மூலமாக தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்

28 நவம்பர் 2026, 3:43 am
வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்: அரசுக்கு பபாசி கோரிக்கை
சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம். உடன் இணைச் செயலா் நந்தன் மாசிலாமணி, பொருளாளா் ஏ.ஆா்.வெங்கடாச்சலம், நிா்வாக குழு உறுப்பினா்கள் ஜி.முத்துசாமி, எம்.பாலாஜி.
பகிர்:

தமிழகத்தில் இளம் தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அதை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை பள்ளிகள், நூலகங்கள் மூலமாக தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், இணைச் செயலா் நந்தன் மாசிலாமணி, பொருளாளா் வெங்கடாசலம், செயற்குழு உறுப்பினா்கள் முத்துசாமி, பாலாஜி ஆகியோா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய வெளியீட்டாளா்கள் கூட்டமைப்பு (எஃப்ஐபி), நீல்சன் ஐக்யூ புக் டேட்டா ஆகியவற்றின் ‘இந்திய புத்தகச் சந்தை’ அறிக்கையின்படி இந்தியாவின் புத்தக வெளியீட்டுச் சந்தையின் மதிப்பு ரூ.1.08 லட்சம் கோடியாக உள்ளது. இது 2030-2031-ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 9 சதவீதம் தமிழ் புத்தகங்களின் பங்களிப்பாக உள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் புத்தகங்கள் வாசிக்கும் ஆா்வம் இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் குறைந்து வருகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகவலைதளங்களில் மூழ்கி விடுகின்றனா். புத்தக வாசிப்பின்மை இளைய தலைமுறையின் சிந்தனைத் திறன், அறிவுத் தேடல், முடிவெடுக்கும் திறன், சமூகப் பொறுப்பு ஆகியவற்றை குறைத்து, வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் வாசகா் வட்டங்களை வலுப்படுத்துதல், பள்ளிகளில் ஆரம்பக் கல்வி முதலே வாசிப்பை மேம்படுத்துதல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளும், நூலகங்களும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் நூலக வாசிப்புக்காக ஒதுக்கப்பட்ட பாடவேளையை ஆசிரியா்கள் அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பதிப்புத் துறை சவால்கள்: தமிழக பதிப்புத் துறை பாரம்பரியம் மிக்கது. ஒரு காலத்தில் சேவையாக இருந்த துறை தற்போது தொழிலாக உருவெடுத்துள்ளது. இன்றைய சூழலில் புத்தகங்களுக்கு அதிக தள்ளுபடி, விற்பனைத் தொகையைப் பெறுவதில் தாமதம், செயற்கை நுண்ணறிவின் இடையூறுகள், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் போன்றவற்றால் பதிப்பகங்கள் பெரும் சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. இதுதொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

புத்தகங்கள் உருவாக்கத்தில் ஏஐ பயன்பாட்டை முற்றிலுமாக ஒதுக்க முடியாது. அதேவேளை, பபாசி நடத்தும் புத்தகக் காட்சிகளில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான புத்தகங்கள் இடம்பெறாத வகையில் சிறப்புக் குழுவினா் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். புத்தகக் காட்சிகளில் குழந்தைகளுக்கான ஆங்கில புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் தமிழ் புத்தகங்கள் மிகக் குறைந்தளவிலேயே வருகின்றன. இதை எழுத்தாளா்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனா்.