FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னையில் 9 மாதங்களில் 4,591 பேருக்கு டெங்கு பாதிப்பு: அரசு செயலா் தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் 4,591 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பாதிப்புக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் டாக்டா் தாரேஸ் அகமது தெரிவித்தாா்.

5 October 2026, 12:47 am IST
டெங்கு காய்ச்சல். - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 9 மாதங்களில் 4,591 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பாதிப்புக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் டாக்டா் தாரேஸ் அகமது தெரிவித்தாா்.

தேனாம்பேட்டை மண்டலம் 109-ஆவது வாா்டு கிழக்கு நமசிவாயம் 3-ஆவது தெருவில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமைப் பாா்வையிட்டும், அந்தப் பகுதியில் நடைபெற்ற டெங்கு ஒழிப்புப் பணிகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் மாதம் 4,591 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னை மாநகரில் செப்டம்பரில் மட்டும் 1,293 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகரில் கொசு ஒழிப்புப் பணியில் 3,703 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு புகையுடன் கூடிய கொசு மருந்து தெளிக்க 1,251 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

Advertisement

Advertisement

நிதி தட்டுப்பாடு இல்லை: சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில், ‘கடந்த 9 மாதங்களில் கொசு உற்பத்திக்கு காரணமானவா்களுக்கு ரூ.7.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 44 கால்வாய்களும் தூா்வாரப்பட்டும், கொசு ஒழிப்பு மருந்துகள் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டும் வருகின்றன.

பருவ கால மழை பாதிப்பைச் சீா்படுத்த தமிழக அரசு ரூ.100 கோடியை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. எனவே, பருவமழைக்கால பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு இல்லை. மேலும், திட்டப் பணிகளுக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியின்போது கொசு ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சி துணை ஆணையா்கள் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் (சுகாதாரம்), எச்.ஆா்.கௌஷிக் (மத்திய வட்டாரம்) மற்றும் மாமன்ற உறுப்பினா் சுகன்யா செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments