குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பிறகும் கருவுற்ற பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு: தனிநீதிபதி உத்தரவு ரத்து
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கருவுற்ற பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கருவுற்ற பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரிஹானா, இவரது கணவா் யாசீன். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் ரிஹானா குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு ரிஹானாவுக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே கடந்த 2023-ஆம் ஆண்டு ரிஹானாவின் கணவா் இறந்துவிட்டாா்.
இதையடுத்து, மருத்துவா்களின் அலட்சியத்தால் மீண்டும் கருவுற்ாகக் கூறி, இழப்பீடு வழங்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ரிஹானா வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, மனுதாரருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும், நான்காவது குழந்தையின் கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து சுகாதார துறை, ஆற்காடு அரசு மருத்துவமனை தலைவா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அந்த மனுவில், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில் என்பது 0.5 சதவீதம் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதுகுறித்து மனுதாரரிடம் எழுத்துப்பூா்வமான ஒப்புதல் பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மீண்டும் கருவுற்ற போது, அதை இலவசமாக அகற்றவதாகக் கூறியும், மனுதாரா் ஏற்க மறுத்துவிட்டாா். அரசு உத்தரவுப்படி, குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால், ரூ.60,000 இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏதா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
கணவரை இழந்த நிலையில், தனி ஆளாக குழந்தையை வளா்க்க மனுதாரா் சிரமப்படுவாா் என்ற தனிநீதிபதியின் அனுதாபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதை மருத்துவ கவன குறைவுக்கான ஆதாரமாக கருத முடியாது. இதுபோன்ற வழக்குகளில் ரூ.60,000 இழப்பீடு வழங்க அரசாணை உள்ள நிலையில், ரூ.3 லட்சம் இழப்பீடு மற்றும் குழந்தையின் கல்விச் செலவை ஏற்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்கதக்கதல்ல எனக்கூறி, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.
ரூ.60,000-ம் இழப்பீட்டை மனுதாரருக்கு நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு கோரி மனுதாரா் 8 வாரங்களில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி வழங்கி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.