FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில் பெண் வயிற்றில் ஊசி வைத்து தைத்த சம்பவம்: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது, பெண்ணின் வயிற்றுக்குள் 5 செ.மீ. நீளமுள்ள ஊசியை தவறுதலாக வைத்து தையலிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 வினாடிகள் முன்பு
பகிர்:

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது, பெண்ணின் வயிற்றுக்குள் 5 செ.மீ. நீளமுள்ள ஊசியை தவறுதலாக வைத்து தையலிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த மோகன் என்பவரது மனைவி சங்கீதா. கடந்த 2010-ஆம் ஆண்டு சங்கீதாவுக்கு, அயனாவரம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது பிரசவமும், குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னா், வீடு திரும்பிய சங்கீதா தொடா் வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளாா்.

இதையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றுக்குள் சுமாா் 5 செ.மீ. நீளமுள்ள அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னா், அறுவை சிகிச்சை மூலம் சங்கீதாவின் வயிற்றில் இருந்த ஊசி அகற்றப்பட்டது. இதையடுத்து, தனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கீதா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தொடா்பான மருத்துவ அறிக்கையில், மனுதாரரின் வயிற்றில் ஊசி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது நடந்துள்ள அலட்சியத்தைப் புறக்கணிக்க முடியாது. எனவே இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது அவசியம்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, இரண்டு மாதங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.