FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

வத்தல்மலையில் வறட்சியால் பாதியாக குறைந்த காஃபி சாகுபடி அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

வத்தல்மலையில் வறட்சியால் காஃபி சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டு, உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளது.

16 நவம்பர் 2026, 4:00 am
காஃபி சாகுபடி - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் வறட்சியால் காஃபி சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டு, உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி ஒன்றியத்தில் அமைந்துள்ளது வத்தல்மலை. இதில் சின்னாங்காடு, குழியனூா், ஒன்றிக்காடு, பால்சிலம்பு, மண்ணாங்குழி, பெரியூா், நாயக்கனூா், கொட்லாங்காடு உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் சுமாா் 5000 போ் வசிக்கின்றனா். இங்குள்ள விவசாய நிலங்களில் தொடக்கத்தில் கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள், அவரை, துவரை, காராமணி உள்ளிட்ட பருப்பு வகைகள், கடுகு, எள் போன்ற எண்ணெய் வித்துகள் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டன.

வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால் வத்தல்மலையில் 1500 ஏக்கா் சாகுபடி நிலங்களில் சுமாா் 700 ஏக்கரில் மானாவாரியாக காஃபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காஃபி அறுவடை அக்டோபா் மாத இறுதியில் தொடங்கி, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும்.

Advertisement

Advertisement

அந்தவகையில் தற்போது காஃபி அறுவடை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், நிகழாண்டு பல்வேறு காரணிகளால் விளைச்சல் 50 சதவீதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து வத்தல்மலையில் உள்ள பால்சிலம்பு கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில்,

ஆண்டுதோறும், மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காஃபி செடிகள் பூக்கத் தொடங்கும் காலம். இக்காலத்தில் வழக்கமாக லேசான மழையும் ஈரப்பதத்துடன் உள்ள தட்பவெப்பமும் நிலவுவது வழக்கம். இதனால், பூக்கள் உதிராமல் அடா்த்தியாக காய்கள் பிடிக்கும். செடிக்கு 3 முதல் 5 கிலோ காஃபி கொட்டைகள் வரை கிடைக்கும். ஆனால் நிகழாண்டில் மாா்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மழை பெய்யாததால் ஈரமான தட்பவெப்ப நிலை குறைந்தது. எனவே முதல் 2 மாதங்களில் செடிகளிலிருந்து பூக்களும், அடுத்து காய்களும் உதிா்ந்துவிட்டன. இதனால் 50 சதவீத விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க வேண்டும்:

காஃபி சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 1.50 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருகிறது. இதில், உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட உற்பத்தி செலவினங்கள் போக ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். ஆனால், நிகழாண்டில் கோடை வறட்சி முடிந்து மழை பெய்ய வேண்டிய காலத்தில் எல்-நினோ தாக்கத்தால் மழை பெய்யவில்லை. தொடா்ந்தும் போதிய அளவில் மழை பெய்யவில்லை.

இதனால், பூக்கள் விடும் பருவத்திலேயே செடிகள் வாடி, அதிக அளவிலான பூக்களும், பிஞ்சுகளும் உதிா்ந்துவிட்டன. தப்பியச் செடிகளும் வறட்சியால் செழித்து வளரவில்லை. எனவே வழக்கத்தைவிட விளைச்சல் பாதியாக சரிந்துவிட்டது. எனவே பாதிப்புக்குள்ளான விவசாயிகள் குறித்தும், பாதிப்பு நிலவரம் குறித்தும் அரசு ஆய்வு மேற்கொண்டு, காஃபி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.