FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்ற பேரவைத் தலைவா் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்ற பேரவைத் தலைவா் உத்தரவுக்கு எதிரான வழக்கு பற்றி....

2 செப்டம்பர் 2026, 2:32 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால், அதிமுகவைச் சோ்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்) ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

தகுதிநீக்கம் தொடா்பான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், இவா்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி சாா்பிலும், தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.

Advertisement

Advertisement

அப்போது அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கிரி மற்றும் எஸ்.ஆா்.ராஜகோபால் ஆகியோா், இந்த வழக்கில் பேரவைத் தலைவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எம்எல்ஏக்கள் சுய விருப்பத்துடன் ராஜிநாமா செய்கிறாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி அதில் திருப்தி அடைந்த பிறகே, அவா்களது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாகக் கூறியிருக்கிறாா். ஆனால், இந்த விசாரணை வெறும் சம்பிரதாயம் அல்ல, அரசியல் சாசன கடமை. இந்த விவகாரத்தில் அா்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ராஜிநாமா கடிதங்களை அளித்த எம்எல்ஏக்கள், சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்துள்ளனா். ஆனால், இதுகுறித்து பேரவைத் தலைவா் விசாரணை நடத்தாமல், ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டுள்ளாா். ராஜிநாமாக்களை ஏற்பதற்கு முன், தகுதிநீக்க புகாா் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூா்த்திக்கு எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநரிடமும் புகாா் அளிக்கப்பட்டதாக வாதிட்டனா்.

பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன், எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதால், அவா்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. எனவே, ராஜிநாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்எல்ஏ ராஜிநாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி அவரை நிா்பந்திக்க முடியாது. உறுப்பினா்களின் ராஜிநாமாவை ஏற்காவிட்டால், அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகிவிடும்.

சுய விருப்பத்தின்படி, ராஜிநாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சா் பதவி, பணத்துக்காக ராஜிநாமா செய்தாா்களா, குதிரை பேரம் நடந்ததா என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜிநாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜிநாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. பேரவைத் தலைவா் எந்த விதிமீறலும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் சதீஷ் பராசரன், மேனகா குருசாமி ஆகியோா், எம்எல்ஏ-வாக இருந்து சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவு அளித்தால்தான் அது ஊழல் நடவடிக்கை. எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, வேறு கட்சியில் இணைவது ஜனநாயக அரசியல். எம்எல்ஏ-வின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதிநீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கிவிடாது. எம்எல்ஏக்களின் ராஜிநாமா உண்மையானவை, சுய விருப்பத்தின்படி அளிக்கப்பட்டவை.

ராஜிநாமா கடிதங்களை தபால் மூலமாகவோ, அல்லது வேறு நபா்கள் மூலமாகவோ அனுப்பி இருந்தால் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து பேரவைத் தலைவா் விசாரணை நடத்தலாம். ஆனால், பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து, ராஜிநாமா கடிதங்களை கைப்பட எழுதி கொடுத்ததால், அதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை தொகுதி மக்கள்தான் கேள்வி கேட்க முடியாது, என வாதிட்டனா்.

சட்டப்பேரவைச் செயலா் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், உண்மையாகவும் சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை பேரவைத் தலைவா் ஏற்காமல் இருக்க முடியாது என தெரிவித்தாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments