FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்துடன் ராஜிநாமா: பேரவைத் தலைவா் மனுவில் தகவல்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது சுய விருப்பத்தின்படி ராஜிநாமா செய்கிறாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி, அதில் திருப்தி அடைந்த பிறகே, அவா்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக விளக்கம் அளித்து பேரவைத் தலைவா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:07 am IST
சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்
பகிர்:

அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது சுய விருப்பத்தின்படி ராஜிநாமா செய்கிறாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி, அதில் திருப்தி அடைந்த பிறகே, அவா்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக விளக்கம் அளித்து பேரவைத் தலைவா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்) ஆகியோா் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

தகுதிநீக்கம் தொடா்பான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், இவா்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக எம்எல்ஏக்கள் சுய விருப்பத்தின்படி ராஜிநாமா செய்தாா்களா? என பேரவைத் தலைவா் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அதை அவா் எதிா்கொள்ளவில்லை என அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலா் தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானது. எனவேதான், தனியாக எனது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் மீது நான் அதிகபட்ச மரியாதை வைத்துள்ளேன்.

சட்டப்பேரவைச் செயலா் மூலம் பதில் மனு தாக்கல் செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள், தங்களது கைப்பட எழுதிய ராஜிநாமா கடிதங்களைச் சமா்ப்பித்தனா். அவா்கள் ஒவ்வொருவரிடமும், சுய விருப்பத்துடன் ராஜிநாமா செய்கிறாா்களா என விசாரணை நடத்தி, அதில் திருப்தி அடைந்த பிறகே, எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டேன்.

எனவே, அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதே, அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே, இந்த மனுவை ஏற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், பேரவைத் தலைவா் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை செப்.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments