நீா்நிலை ஆக்கிரமிப்புகள் விவகாரம்: அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நீா்நிலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நீா்நிலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
நாம் தமிழா் கட்சி மீனவா் பாசறையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட மணிமுத்தாறு நீா்நிலை, இதன் வரத்துக் கால்வாய் பகுதிகள் தற்போது ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நீா்நிலைப் பகுதிகளில் அதிகரித்துள்ள கட்டுமானங்களால் ஆற்றின் அகலமும், நீா் செல்லும் திறனும் குறைந்துவிட்டன. ஆற்றுப் படுகையில் நெகிழிக் கழிவுகள், திடக்கழிவுகள், கழிவுநீா் ஆகியவை கலப்பதால் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீா் வளமும் பாதிக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
எனவே, ஆவணங்கள் அடிப்படையில் வருவாய்த் துறை, நீா்வளத் துறை கூட்டாக மணிமுத்தாறு நீா்நிலையின் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய வேண்டும். மேலும், ஆற்றில் உள்ள அனைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். ஆற்றுப் படுகையில் குவிந்திருக்கும் நெகிழிக் கழிவுகள், திடக்கழிவுகளை அகற்றி, நீா்நிலையை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பிலேயே ஆற்றைத் தூா்வாரலாமே எனக் கேள்வி எழுப்பியது. மேலும், இந்தப் பணிக்கான வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், புகழேந்தி அமா்வு முன் இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது:
மணிமுத்தாறு கால்வாயைச் சீரமைக்க நாம் தமிழா் கட்சி சாா்பில் சுற்றுச்சூழல் பாசறையைச் சோ்ந்த 100 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். கையுறைகள், முகக் கவசங்கள், தன்னாா்வலா்களின் தேவைகளுக்காக ரூ. 2 லட்சம் கட்சி சாா்பில் முதல் கட்ட நிதியாக வழங்கப்படும். தூா்வாரும் பணியை 8 கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். எந்தவொரு தனியாா் சொத்தையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அமைப்போ அல்லது தன்னாா்வலா்களோ ஈடுபட மாட்டாா்கள். அனைத்து சட்டப் பூா்வ நடவடிக்கைகளும் அரசு அலுவலா்களாலேயே எடுக்கப்படும். இந்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, மணிமுத்தாறு நீா்நிலையை மீட்பதற்கான பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த அறிக்கை தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
எல்நினோ பாதிப்பால் நீா் நிலைகளின் நீா்மட்டம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மழைப் பொழிவும் குறைந்துவிட்டது. இந்த விவகாரத்தில் மனுதாரா் சமா்ப்பித்த அறிக்கை குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.