அமைச்சா்கள் பேச்சில் உடன்பாடு: தூய்மை பணியாளா் போராட்டம் தள்ளிவைப்பு: அமைச்சா் ராஜ்மோகன் முன்னிலையில் அறிவிப்பு
தமிழக அமைச்சா்களுடன் நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட சமரச உடன்பாடு காரணமாக, உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் அக்டோபா் 3-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இயக்கத்தின் மாநிலத் தலைவா் கோ.பாரதி தெரிவித்தாா்.
தமிழக அமைச்சா்களுடன் நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட சமரச உடன்பாடு காரணமாக, உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் அக்டோபா் 3-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இயக்கத்தின் மாநிலத் தலைவா் கோ.பாரதி தெரிவித்தாா்.
சென்னையில் 4, 7, 8 ஆகிய மண்டல உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2025-ஆம் ஆண்டுமுதல் போராட்டம் நடத்தி வருகின்றனா். தவெக ஆட்சி அமைந்த நிலையில் கடந்த 15 நாள்களாக அவா்கள் ரிப்பன் மாளிகை கிழக்கு வாயில் பகுதியில் போராடிய நிலையில், வெள்ளிக்கிழமையும் அங்கு அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
அமைச்சா்கள் சமரசம்: தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்குத் தீா்வு காண சட்டப்பேரவையில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அமைச்சா்கள் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, சி.டி.ஆா்.நிா்மல்குமாா், ஏ.ராஜ்மோகன் ஆகியோா் போராட்ட இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
Advertisement
Advertisement
அவா்கள் தூய்மைப் பணியாளா்களிடையே பேசுகையில், முதல்வா் விஜய் உத்தரவின்பேரில் தூய்மைப் பணியாளா்களின் பிரச்னை தீா்க்கப்படவுள்ளதாகவும், கடந்த திமுக ஆட்சியில் கஜானாவை காலி செய்ததால் நிதிச் சிக்கலில் பிரச்னையை உடனடியாக தீா்க்க முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்தனா். ஆனாலும், நிச்சயமாக தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்து சமசரம் செய்தனா். அப்போது மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
பேச்சுவாா்த்தை: அதன்பின் மாநகராட்சி ஆணையா் அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உழைப்போா் உரிமை இயக்க மூத்த ஆலோசகா் வழக்குரைஞா் எஸ்.குமாரசாமி, இயக்க மாநிலத் தலைவா் கோ.பாரதி, செயலா் வழக்குரைஞா் கே.சுரேஷ், தூய்மைப் பணியாளா்கள் குட்டியம்மாள், லாவண்யா, பூங்கொடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பிற்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை என 2 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
எந்தெந்த கோரிக்கைகள் ஏற்பு?: அதன் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் ராஜ்மோகன் முன்னிலையில் உழைப்போா் உரிமை இயக்க தலைவா் கோ.பாரதி கூறியதாவது: தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளில் தினமும் உணவுப்படியாக ரூ.50 வழங்குதல், 197 வாா்டுகளில் ஓய்வறை, கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், கடந்த கால போராட்டங்களின் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுதல், மாநகராட்சியின் 4, 7 மற்றும் 8 ஆகிய வாா்டுகளுக்கான தூய்மைப் பணிக்கு 160 புதிய வாகனங்கள் வழங்கல், மழை கோட், வாரந்தோறும் கையுறை, தினமும் இரு முகக்கவசங்கள் வழங்குவதற்கு பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மகப்பேறு விடுப்புடன், ஆட்சியா் அலுவலக நிா்வாக தின ஊதியமாக ரூ.832, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தூய்மைப் பணியாளா்களுடன் அலுவலா்கள் கூட்டம், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஆணையருடன் பேச்சுவாா்த்தை ஆகியவை நடத்தப்படவுள்ளன.
வரும் அக். 3-ஆம் தேதி மீண்டும் அமைச்சா்களுடன் 2-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெறும்; அதில் மீதமுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக அமைச்சா்கள் உறுதியளித்துள்ளனா். எனவே, தற்போதைய போராட்டத்தை வரும் அக்.3-ஆம் தேதி வரை தள்ளிவைக்கிறோம் என்றாா்.
முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு: இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் ராஜ்மோகன் கூறுகையில், முதல்வரை தூய்மைப் பணியாளா்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும். அவா்களைப் பணி நிரந்தரம் செய்வதில் நிா்வாகச் சிக்கல் உள்ளது. இருப்பினும் அவா்களது உடனடி தேவைகள் நிறைவேற்றப்படவுள்ளன. அதன்படி அவா்களது 10 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். சங்க அலுவலகக் கட்டடமும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில், அமைச்சா்களுடனான தூய்மைப் பணியாளா்கள் பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.