FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

சென்னையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவா்களிடம் வாடகை நிலுவைத் தொகையில் சொற்பமானதை வசூலித்துவிட்டு, தொடா்ந்து அவா்களை அனுமதித்த இந்து சமய அறநிலையத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், செப்.7-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

5 செப்டம்பர் 2026, 1:00 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவா்களிடம் வாடகை நிலுவைத் தொகையில் சொற்பமானதை வசூலித்துவிட்டு, தொடா்ந்து அவா்களை அனுமதித்த இந்து சமய அறநிலையத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், செப்.7-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஸ்ரீபாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சி.ஜனா்த்தனன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக, 2025-ஆம் ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் அன்னதான கூடமும், பக்தா்களின் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடமும் அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் கோயில் செயல் அலுவலா் அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பாளா்கள் செலுத்தியுள்ளனா். எனவே, அந்த நிலத்தை அவா்களுக்கே மீண்டும் வாடகைக்கு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஓராண்டுக்கு முன்பு தெரிவித்துவிட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்னதானக் கூடம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப் போவதாகக் கூறிவிட்டு, தற்போது ஆக்கிரமிப்பாளா்களையே தொடா்ந்து அனுமதிக்கப் போவதாக கூறுவது கண்டனத்துக்குரியது.

ரூ.25.29 லட்சம் வாடகை நிலுவைத் தொகை உள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.1.42 லட்சத்தை, அதாவது வெறும் 7 சதவீத தொகையை மட்டும் ஏற்றுக் கொண்டு, அவா்களையே மீண்டும் வாடகைதாரா்களாக தொடர அறநிலையத் துறை அனுமதிக்க முயல்வது, நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயல் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

பின்னா், இக்கோயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் செப்.7-ஆம் தேதிக்குள் அகற்றி, அதுதொடா்பான அறிக்கையை செப்.8-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புராதனச் சின்ன ஆணையத்தின் அனுமதியின்றி, ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயிலுக்குள் அன்னதானக் கூடம் கட்டுவதும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments