அமிா்தாஞ்சன் நிறுவனத்திடமிருந்து ரூ. 9.74 கோடி வாடகை நிலுவை வசூல்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்
அமிா்தாஞ்சன் நிறுவனத்திடமிருந்து ரூ. 9.74 கோடி வாடகை நிலுவை வசூல்...
சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலுக்கு செலுத்தப்பட வேண்டிய வாடகை நிலுவைத் தொகை ரூ.9.74 கோடி அமிா்தாஞ்சன் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்டதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலுக்கு, மயிலாப்பூா் லஸ் சா்ச் சாலையில் சா்வே எண். 3333-இல் உள்ள 14 கிரவுண்ட் 910 சதுரஅடி நிலம் சொந்தமானதாகும். இந்த நிலம் 1901-ஆம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அமிா்தாஞ்சன் நிறுவனத்துக்கு விடப்பட்டிருந்தது.
அரசாணைப்படி 1.11.2001 முதல் நியாய வாடகை நிா்ணயம் செய்யப்பட்டது. இதனை எதிா்த்து அமிா்தாஞ்சன் நிறுவனம் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மிக நீண்ட சட்ட போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து மேல்முறையீடு வழக்கு, மறு ஆய்வு மனு வழக்கு உயா்நீதிமன்றத்தால் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து கபாலீசுவரா் திருக்கோயிலின் இணை ஆணையா் கவெனிதா 2.5.2018 வரையிலான வாடகை நிலுவை ரூ.9 கோடியே 74,67,151-ஐ வசூலிக்க இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 79(சி) -இன் கீழ் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள மண்டல இணை ஆணையருக்கு அறிக்கை சமா்ப்பித்தாா். அதன் அடிப்படையில், ஜப்தி நடவடிக்கை எடுக்க சென்னை மண்டல உதவி ஆணையா் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டாா். மேற்படி நடவடிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூலை 18-ஆம் தேதி உரிய கால அவகாசம் அளித்து ஜப்தி அறிவிப்பு சாா்பு செய்யப்பட்டது. அதன்படி ஆக.2-க்குள் நிலுவைத் தொகை செலுத்த வேண்டும்.
இந்தநிலையில் அமிா்தாஞ்சன் நிறுவனம் 10 சதவீத டிடிஎஸ் தொகை ரூ,97 லட்சத்து 46,715 பிடித்தம் போக ரூ.8 கோடியே 77,20,436-ஐ திருக்கோவிலுக்கு வரைவோலையாக கபாலீசுவரா் திருக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் பி.விஜயகுமாா் ரெட்டியிடம் வழங்கினா். இத்தொகை திருக்கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.டிடிஎஸ் தொகை வருமான வரித் துறையிடமிருந்து திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.